சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணபக்தி - 53
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் - 53 "காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" என்று காணும் இடமெல்லாம் கண்ணனைக் கண்டு பாடினான் பாரதி! இம்மரபு தமிழருக்கு எப்போது தோன்றியது? பக்தி இயக்க காலத்திலா? பக்தி இயக்க காலத்தில் இது வளர்ந்தது உண்மை, ஆனால் இதன் மூலம் தமிழின் மிகப் பழைய சங்க இலக்கியங்களில் தான் உள்ளது! அகநானூறு 175 வது பாடல்! 'நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், திருவில்...' அதாவது சூர்ய கதிர்களைப் போன்ற ஒளிமிக்க சக்கரம் (நேமி) உடையவன் திருமால், பகைவர்கள் போர் சிந்தனையையே துறக்கும் அளவிற்கு அச்சம் அடையச் செய்யும் வலிமை மிக்க அவனது மார்பினில் உள்ள மாலையைப் போன்று கார்காலத்தில் தோன்றிய வானவில்லின் நிறம் இருந்ததாம்! வானவில் தோன்றும் இயற்கைக் காட்சியைக் கூட தாம் வணங்கும் இறைவனான திருமாலோடு இணைத்துப் பார்த்த சங்கத்தமிழரது பக்தியை என்னவென்பது?!