மாயோன்

மாயோன் -1

Who is Mayon?
Tamil god mayon

மாயோன் என்பவர் யார்?

மாயோன் முல்லை நிலத் திணை தெய்வம், மக்களைக் காக்கும் திருமாலாகிய பெருந்தெய்வம். தமிழரது முதல் தெய்வம்.



தமிழர் தெய்வம் மாயோன்.

மாயோன் என்பவர் தொல்காப்பியத்தில் முல்லை நிலத்தின் திணை தெய்வமாகக் குறிப்பிடப்படுகிறார். தமிழரின் முதல் தெய்வம் மாயோனே!

தொல்காப்பியம்

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்        படுமே
தொல்காப்பியம் பொருள்.அகத் 5/1

பொருள் -
மாயோன் காடுறை உலகமான முல்லை  நிலத் தெய்வம் , குறிஞ்சிக்கு சேயோனாகிய முருகன் தெய்வமாவார், மருத நிலத் தெய்வம் வேந்தன் அதாவது தேவர்களுக்கெல்லாம் வேந்தனான இந்திரன். நெய்தல் நில தெய்வம் வருணன் ஆவார். இவர்களே தமிழரது திணை தெய்வம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழரின் முதல் தெய்வம் மாயோனே!



அதே தொல்காப்பியத்தில் மற்றொரு முறை மாயோன் குறிப்பிடப்படுகிறார்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
தெல்காப்பியம் பொருள்.புறத் 5/9

பொருள் - பூவை நிலை எனப்படுவது யாதென்றால் மன்னனை நிலைத்த பெரும் புகழை உடைய மாயோனோடு ஒப்பிட்டுப் பாடுவது ஆகும்.



இதிலிருந்து மாயோன் என்பவர் தமிழரது பெருந்தெய்வம்... திணை தெய்வம் மட்டுமல்ல என்று தெரிகிறது.



மாயோன் என்பவர் காக்கும் தெய்வமான திருமால், விஷ்ணு, நாராயணன் , பெருமாள் ஆவார். மன்னன் என்பவனும் மக்களைக் காப்பவன் தானே? அதனால் தான் மன்னனைப் புகழ வேறு எந்த தெய்வத்தோடும் ஒப்பிடாமல் மாயோனோடு ஒப்பிடுகிறார்கள். தவிர தமிழ் அரச குடிகள் மாயோனது வழித்தோன்றல்களே என்தால் இவ்வாறு தொல்காப்பியர் கூறி உள்ளார்.

மாயோனும் மன்னவனும்.

மன்னனைத் திருமாலோடு ஒப்பிட்டுப் பாடுவது சங்கக் கால மரபு... ஏனெனில் மாயோனும் மன்னவனும் மக்களைக் காப்பவர்களாவர்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப்பாடல்...
புறநானூறு பாடல் 57 வரிகள் 1-3

"வல்லார் ஆயினும் , வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற"

அதாவது வலிமை உடையவர், வலிமை இல்லாதவர் என்று பேதம் பார்க்காது
தன்னைப் புகழ்ந்தோர் அனைவரையும் ஆதரித்துப் காப்பவன் பாண்டியன் நன்மாறன் ஆவான். அவனது இத்தகைய குணம் தன் பக்தர்களிடம் எவ்வித வேற்றுமையும் காட்டாமல், தன்னை நம்பினோரைக் காக்கின்ற திருமாலின் குணத்தை ஒத்ததாய் உள்ளது என்கிறார் புலவர்.



அதாவது இறைவன் முன் பக்தர்கள் அனைவரும் சமம். பக்தன் பாமரனா , பண்டிதனா , செல்வந்தனா , வறியவனா என்று பகவான் பார்ப்பது இல்லை. அதற்குச் சிறந்த உதாரணம் இன்றும்  இவ்வளவு செல்வம் குவியும் திருப்பதியில் எம்பெருமானுக்கு மரபுப்படி மண்சட்டியில் வைத்த தயிர்சாதமே முக்கிய நைவேத்யம் ஆகும்.

இதன்மூலம் சங்கத்தமிழரது கடவுட்கொள்கை இன்றுள்ளது போன்றே அன்றும் இருந்தது என்று துணிந்து கூறலாம்.

மாயோன் என்பவர் கிருஷ்ணனா?

மஹாபாரதம், பாகவதம், ஹரி வம்சம் கூறும் கிருஷ்ணனே மாயோன் ஆவார்..
ஆதாரம்..

கலித்தொகை -103 வது பாடலில் வரும் வரிகள்

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்து இட்டுப் புடைத்த ஞான்று, இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று, என் நெஞ்சு!

இந்த பாடல் ஏறுதழுவும் வீரனை வர்ணிக்கின்றது. தோழியானவள் தலைவியிடம் இளம் காளையினை தழுவுகின்ற உன் நாயகனைப் பார். அன்றொரு நாள் கம்சனால் ஏவப்பட்ட 'கேசி' எனும் குதிரை வடிவில் வந்த அசுரனை வாய் பிழந்து கொன்றழித்த கண்ணன் கூட இவ்வாறு தான் வீரத்தை வெளிப்படுத்தினானோ? என்று தலைவனது வீரத்தையும், அழகையும் திருமாலோடு ஒப்பிடுகிறாள்.



இதன்மூலம் நாம் அறிவது யாதெனின் புராணங்கள் ஆரிய பிராமணர்களால் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட புரட்டுகளல்ல.. கிருஷ்ணனைப் பற்றிய புராணங்கள்  தமிழ்மண்ணில் காலம்காலமாக வழங்கி வந்தவையே! சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இராமன், கிருஷ்ணன் முதலியோரைப் புகழும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் தமிழரது ஏறுதழுவும் கலாசாரத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றது. மேலும் கிருஷ்ணனும் ஏறுதழுவியே நப்பின்னை என்ற பெண்ணை மணந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சங்கக்காலத் தமிழரது காதல் தெய்வம் யார்?

காதல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராதா கிருஷ்ணரே..

பழந்தமிழரது காதல் தெய்வம் மாயோனே!

ஆதாரம்
கலித்தொகை - பாடல் எண் 108

இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.

பொருள்

தன் காதலியைப் பார்த்துக் காதலன் சொல்கிறான், "அழகிய என் காதலியே உனக்கு இணையான பெண் இன்னொருத்தி எனக்கில்லை, உன்னையே நான் காதலிக்கிறேன், நீ வருந்தாதே, இது உண்மை என்பதை 'மலைபோன்ற உறுதியான அழகிய மார்பினை உடைய திருமாலின் திருவடிகளை தலையில் வைத்து, இருகைகளால் தொட்டு சூளுரைக்கிறேன் என்கிறான்.

நாம்   அறிந்துகொள்வது யாதெனின் சூளுரைத்து உறுதி செய்வது என்பது இன்றளவும் இந்துக்களிடையே காணப்படும் பண்பாகும், இன்றளவும் கிராமங்களில் இறைவன் மீது உண்மையாக என்று சூளுரைத்து நிரூபித்தல்  நடைமுறையில் உண்டு. இது அக்காலத்திலிருந்தே இருந்த வழக்கமாகும். இங்கு தலைவன் திருமால் மீது சூளுரைக்கிறான்.திருமாலே அன்று முதல் இன்றுவரை பாரத தேசத்து மக்களுக்குக் காதல் தெய்வமாக இருக்கிறான்.



காதல் என்றவுடன் நினைவுக்கு வருவது 'ராதா கிருஷ்ணனே', அதனால் தான் ஆண்டாள் அவன்மீது காதல் கொண்டு திருப்பாவை பாடினாள். அதனால் தான் பாரதியும் விதம்விதமாக கண்ணனை வர்ணித்து காதல் கொண்டு பாடினார். இன்றும் நம் தமிழ் மக்களிடையே காதல் தெய்வமாக கண்ணனே உள்ளான், அதனால் தான் கண்ணனை வைத்து பல திரை இசைப்பாடல்களும் இன்றும் தொடர்கின்றன.

இது ஒட்டுமொத்த பாரத தேசத்தில் தெய்வீகக் காதலின் நாயகனாக கண்ணனே ஆண்டாண்டு காலமாக இருந்துள்ளான் என்பதற்குச் சாட்சியாகும்.

மாயோனும் வாலியோனும் - கிருஷ்ண பலராமன்



மாயோன் கிருஷ்ணனே என்பதை உறுதி செய்யும் வகையில்... மாயோன் பாடப்படுகின்ற இடத்தில் அவரோடு இணைத்து வாலியோன் அதாவது கிருஷ்ணனது அண்ணன் பலராமனும் பாடப்படுகிறான்.

கபிலர் நற்றிணையில் (32) குறிஞ்சித்திணை பாடலில்

"மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி"

என்று திருமாலுடன் (மலை போன்ற கரும்பச்சை நிறமுடையவன்) வெள்ளருவி நிறமுடைய பலராமனையும் குறிப்பிடுகிறார்.

ஒருகாலத்தில் தமிழகத்தில் புகழ் பெற்றிருந்த பலராம வழிபாடு இன்று இல்லாத போதிலும்...

தமிழ்ப் பெயர்களான 'வெள்ளையன்', வெள்ளைக்கண்ணு, வெள்ளைச்சாமி, மதுரை வட்டாரங்களில் வழங்கப்படும் உலக்கையன், முத்துலக்கையன் போன்றவை பலராமனைக் குறிப்பவை

இப்பெயர்கள் இன்றளவும் வழங்கப்பெறுவது பலராம வழிபாடின் மிச்சமே.

ஆக, பாரத தேசம் முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்படுவது தமிழரிடமிருந்து பரிணமித்த சனாதனதர்மமே.

மாயோன் முப்பாட்டனா ? முழுமுதற் தெய்வமா?

மாயோனை முழுமுதற் தெய்வமாகத் தமிழர் போற்றினர். மாயோன் என்பவர் பிறப்பற்ற நிலையை (மோட்சம்/ முக்தி)
தரும் பெருந்தெய்வமாவார்.



ஆதாரம்...
பரிபாடல் என்பது எட்டுத்தொகையைச் சார்ந்த சங்கத்தமிழ் நூலாகும்.

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்க அருள் செய்வது: பிறப்பறுக்கும் திருவடி என்ற கருத்தை இப்பாடல் விளக்குகிறது.



பாடல்

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

(பரிபாடல். 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)


மறுபிறப்பு என்பது இந்து மதத்திற்கு மட்டுமே உரிய நம்பிக்கை ஆகும். மறுபிறவியை அறுக்க திருமாலின் திருவடியே வழியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

முடிவாக மாயோன் என்பது திருமாலையும் அவரது பரிபூர்ண அவதாரமான கிருஷ்ணரையுமே குறிக்கும்... வேறு யாரையும் அல்ல!

மாயோனே தமிழரின் முதல் தெய்வம், காதல் தெய்வம், மன்னன் மக்களைக் காப்பது போல் உலகைக் காக்கும் தெய்வம், பிறப்பற்ற நிலை அருளும் முழுமுதற் தெய்வம்!
  

Comments

Popular posts from this blog

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்