தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

சோபகிருது வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்று உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் சரியானதா?

சாமானியமாக தமிழ் புத்தாண்டு என்று கூறினாலும் கூட உண்மையில் இப்புத்தாண்டை சூரியப் புத்தாண்டு அல்லது சௌரமான புத்தாண்டு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் மொழிக்கு ஒரு புத்தாண்டு என்பது என்றுமே இருந்ததில்லை.  உதாரணமாக நாம் ஆங்கில புத்தாண்டு என்று கூறினாலும் கூட அது ஆங்கிலேயர்களால் மட்டும் இன்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை பேசுகின்ற கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவம் பரவிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட காலனிய பகுதிகளிலும் இப்புத்தாண்டு வரவேற்பைப் பெற்று இன்று உலகின் புத்தாண்டு என்ற நிலையை எழுதி விட்டது. என்றாலும் இதனுடைய தோற்றுவாய் என்று பார்த்தோமேயானால், கிரகேரியன் என்கின்ற பாதிரியாரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இது கிரிகேரியன் புத்தாண்டு என்று அறியப்படுகிறது.


அடுத்ததாக தெலுங்கு புத்தாண்டு என்று அறியப்பட்டாலும் கூட யுகாதி தெலுங்கு மக்களுக்கு மட்டுமல்லாமல் கன்னட மக்கள், மராட்டி மக்களுக்கும் புத்தாண்டாக உள்ளது. இந்தப் புத்தாண்டு என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது அதாவது சாந்திரமான வருஷ பிறப்பு. 


தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவது சௌரமான கணக்கு. அதன்படி சூரியன் மேஷ ராசியின் நுழைகின்ற முதல் நாளே வருடம் பிறக்கிறது இது தமிழ்நாட்டில் மட்டும் இன்றி கேரளா, ஒரிசா, வங்காளம், தாய்லாந்து கம்போடியா உள்ளிட்ட பல பகுதிகளில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 


ஆகவே மொழிக்கும் புத்தாண்டுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அதேபோல தை மாதம் தான் புத்தாண்டு என்று கூறுவதற்கும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. 

சரி தமிழரின் புத்தாண்டு தையா? சித்திரையா? 

தை பொய் 

தை புத்தாண்டு என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் சங்க பாடல்களில் தை மாதம் குளங்கள் குளிர்ச்சியாக இருக்கும் என்ற செய்தி தான் கூறப்பட்டுள்ளது தவிர எங்கேயும் அது புத்தாண்டு என்று கூறப்படவில்லை. 

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" (நற்றிணை)

2. "தைஇத் திங்கள் தண்கயம் போல்"" (புறநானூறு)

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல"(ஐங்குறுநூறு)

இவற்றின் பொருள் தை திங்கள் (மாதம்) கயம் (குளம்) தண்மையாக (குளிர்ச்சியாக) இருக்கும்! 

இதில் எந்த இடத்தில் 'தை புத்தாண்டு' என்று கூறப்பட்டுள்ளது? 



சித்திரைக்கு ஆதாரம்

நெடுநல்வாடையில் ஒரு பாடலில் ஆடு எனப்படும் மேஷ ராசி முதல் ராசி என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுகின்ற சித்திரையே புத்தாண்டாக அன்றிலிருந்தே இருந்திருக்க வேண்டும்.




சித்திரை புத்தாண்டை மறுப்பவர்கள் அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் 60 வருடங்களின் பெயரை சமஸ்கிருதத்தில் உள்ளன என்பதுதான். இவர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால் 60 வருடங்களின் பெயர் மட்டுமல்ல 12 தமிழ் மாதங்களுமே சமஸ்கிருத பெயர் தான் உள்ளன. எவ்வாறு என்பதை பார்ப்போம்



தமிழ் மாதப் பெயர்கள் தமிழல்ல, ஸம்ஸ்க்ருத மூலத்தை உடையவை. 

தமிழ் மாதப் பெயர்கள் எவ்வாறு தோன்றின? 

ஒவ்வொரு மாதத்தில் ஒரு பௌர்ணமி வரும்... அது எந்த நக்ஷத்ரத்தன்று வருகிறதோ அந்த நக்ஷத்ர பெயரே மாதப் பெயராகும்! இன்றைய மாதப் பெயர்கள் நக்ஷத்ர பெயர்களின் திரிந்த வடிவமே ஆகும்! 

சித்திரை நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வரும் மாதம் சித்திரை... தெலுங்கில் சைத்ரம்! 

விசாகத்தில் பௌர்ணமி வருவதால் அது விசாகி - வைசாகி- வைகாசி! வைகாசி விசாகம் பண்டிகை நாளல்லவா?! 

அனுஷத்தில் வருவதால் ஆனி ஆனது! 

பூராடம் என்பது பூர்வ ஆஷாடம் அதுவே ஆஷாடம் - ஆடி என்றானது! 

திருவோணத்தை ஸ்ரவணம் என்பர்... ஸ்ராவணி - ஆவணி ஆயிற்று! 

பூரட்டாதி நக்ஷத்ரப் பெயரே புரட்டாசி மாதப் பெயரானது! 

அஸ்வினி என்பது ஆஸ்விஜமாகி ஐப்பசி ஆனது! 

கார்த்திகை சொல்லவே வேண்டாம்! 

மார்கழி என்பது மார்கசீர்ஷம் அதாவது ம்ருகசீர்ஷ நக்ஷரத்தில் பௌர்ணமி வருவதால் வந்த பெயர்!

பூச நக்ஷத்ரத்தை தைஷ்யம் என்பர் ... அது தை ஆனது!

மகம் - மாக - மாசி ஆனது!

உத்தர பல்குனி நக்ஷத்ரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி - பங்குனி ஆனது!

இந்த நக்ஷத்ர மற்றும் மாதப் பெயர்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ளவை ஆகும்! 

இவ்வழக்கு சங்ககாலத்திலிருந்தே உள்ளதென்பதற்கு ஆதாரமாக தை என்ற மாதத்தின் பெயர் பலமுறை சங்க இலக்கியத்தில் வந்துள்ளது! ரோஹிணி என்ற நக்ஷத்ரதப் பெயர் நெடுநல்வாடை என்ற சங்க இலக்கியத்தில் நேரடியாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது! 

அதுபோக தமிழர்கள் திராவிடர்கள் என்று சொன்னால் சக திராவிடர்களான தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளம் பேசுகின்ற மக்களுக்கு உள்ளது போலவே சித்திரை மாதத்தில் தானே புத்தாண்டு வரவேண்டும் அது எப்படி தைக்குப் போகும்?


ஸம்ஸ்க்ருத 60 சுழல் ஆண்டைப் பயன்படுத்திய தமிழர்

இராஜராஜச் சோழரின்  ஸ்ரீரங்கப்பட்டினம் கல்வெட்டு. இக்கல்வெட்டில் "பரிதாபி" என்னும் தமிழ் (சமஸ்கிருத) வருடம் குறிக்கப்பட்டுள்ளது.

( Epi.carnatica vol 3 no 140)

இராஜராஜனின் ஹோட்டூர் கல்வெட்டு.காலம் கி.பி.1007.

இக்கல்வெட்டில் " பிலவங்க " என்னும் தமிழ் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

( Epi.indica vol 16 p.74)

(கல்வெட்டு தகவல்கள் நன்றி திரு. மாரிராஜன் ஐயா) 

இப்படி தமிழர்களின் பெருமை என போற்றப்படும் நம் ராஜராஜ சோழனே சமஸ்கிருத பெயரில் உள்ள தமிழ் வருடங்களைப் பயன்படுத்தியுள்ளார்! ஆனால் திருவள்ளுவர் ஆண்டு கணக்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! கி.மு.31 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பிறந்ததாகச் சொல்லும் ஆவணங்கள் யாரேனும் தந்தால் இக்கருத்தை மாற்றிக் கொள்ளலாம்! (அல்லது திருவள்ளுர் ஆண்டுக் கணக்கு எங்கள் நம்பிக்கை மட்டுமே என்று கூறிவிட்டால் அதில் யாரும் தலையிட இயலாது... அறிவியல் என்று சொல்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்!) 






Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்