தமிழ் அரசர்களின் பூர்வீகம்

 சங்க காலத்திலிருந்தே தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்களில் முக்கியமானவர்கள் சேர, சோழ, பாண்டியர். இவர்களைத் தவிர சிற்றரசர்களான வேளிர்கள் ஆகியோர். 


இவர்களின் முன்னோர் யார், பூர்வீகம் என்ன?



படம் - ஆர்யவர்தம் என்று குறிப்படப்படும் பாரதத்தின் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதி. இதுவே தமிழ் அரசர்களின் பூர்வீகமாகும். 


வேளிர்களின் பூர்வீகம் 

இது பற்றி மாபெரும் தமிழ் அறிஞரான மு. இராகவ ஐயங்கார் அவர்களின் வேளிர் வரலாறு என்ற நூலில் எழுதியுள்ளார்.


 


புறநானூறு 201 
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு			
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்
தார் அணி யானை சேட்டு இரும் கோவே
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்	
	

  

இப்பாட்டில் புலவர் கபிலர் பாரி மகளிரை இருங்கோவேள் எனும் வேளிர் அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்போது இருங்கோவேளின் முன்னோர் வடபால் முனிவனின் தடவில் தோன்றி செம்பினாலான துவாரகையை  49 தலைமுறைகள் ஆண்டவர்கள் என்கிறார். இதில் தடவு என்பது மலைகளால் சூழப்பட்ட இடம் என்று சில அறிஞர்களும், அக்னிகுண்டம் என்று சிலரும் பொருள் கொள்கின்றனர். அதே போல துவரை என்பது குஜராத்தில் உள்ள கண்ணன் ஆண்ட துவாரகை என்றும், கர்நாடகாவில் உள்ள ஹொய்சாளரின் தலைநகரமாக இருந்த துவரா சமுத்திரம் என்றும் மாறுபட்ட கருத்துண்டு. சங்ககாலத்தில் கர்நாடக துவரா சமுத்திரம் இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது. ஹொய்சாளரின் புராணங்களில் அவர்களின் முன்னோர் ஒரு முனிவரைக் காப்பதற்காக புலியைக் கொன்றனர் என்ற செய்தி காணப்படுகிறது. அதற்கேற்ப இருன்கோவேளை புலிக்கடி மால் என்ற சொல்லும் இப்புறநானூற்றுப் பாடலில் இடம்பெறுகிறது. ஹொய்சாளரும், வேளிரும் ஒரே மரபினர் என்று கொள்ள இதைச் சான்றாக்க கொள்ள முடியும். 


ஆகவே, வேளிரின் பூர்வீகம் கர்நாடகம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு திரு. மு. இராகவ ஐயங்கார் காட்டும் ஒரு மேற்கோளைக் பார்ப்போம். 

ஆசிரியர் நச்சினார்க்கினியர் (14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:

தேவரெல்லாங்கூடி ‘யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்’ என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்…
துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி....’

அதாவது அகத்திய முனிவர் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணரின் சந்ததியினரை அழைத்துக் கொண்டு காடாக இருந்த தமிழகத்தை நாடாக மாற்றியுள்ளார் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். மேலும் தொல்காப்பிய உரையின் ஓரிடத்தில் நச்சினார்க்கினியர் ‘மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது” (பொருளதிகாரம் – 32) என்கிறார். 

ஆகவே, வேளிர் என்போர் கிருஷ்ணர் வழிவந்தவர்கள் என்று கொண்டால் அவர்கள் ஆண்டது மிகத் தெளிவாக குஜராத் துவாரகையே என்று துணியலாம். துவாரகை நகரின் சமய முக்கியத்தும் கருதியே பின்னால் தோன்றிய நகரங்களுக்கு இந்நகரின் பெயர் வைக்கப்பட்டுள்ளன. தவிர ஆழ்வார் பாசுரங்களில் கிருஷ்ணனை துவரைப் பிரான் என்று குறிப்பிடுவதுண்டு. பழந்தமிழர் அறிந்த துவரை குஜராத் துவாரகையாகவே இருக்க வேண்டும். கர்நாடக துவரா சமுத்திரம் பற்றிய இலக்கியக் குறிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 

முடிவாக வேளிர் எனும் தமிழ் சிற்றரச மரபினர் குஜராத் துவாரகியிலிருந்து வந்தவர்கள் என்று துணியலாம்.


பாண்டியர்களின் பூர்வீகம் 

பாண்டியரின் முன்னோர்கள் பற்றி செப்பேடுகள் பேசுகின்றன. 

பாண்டியர்களது முன்னோர் பற்றி பராந்தக வீரநாராயணன் (பொ.ஆ 859 - 907) வெளியிட்ட தளவாய்புரச் செப்பேடு கூறுன்றது! 

பாற்கடலில் துயிலும் ஸ்ரீ பூபதியாகிய முதல்வன் திருமால், அவன் நாபிக் கமலத்தில் தோன்றியவன் ப்ரம்மன் அவர் புத்திரன் அத்ரி முனிவர், அவர் மகன் சந்திரன், சந்திரனது புத்திரனும் சூர்ய குல மனுவின் மகளான இளாவை மணந்தவனுமாகிய புதன் வழிவந்த புரூருன், அவன் வழிவந்த நகுஷன் இவர்களது வழித்தோன்றலே பாண்டியர்கள் என்கின்றது!

                                                 விஷ்ணு

                                                      |

                                                 பிரம்மா 

        ‌                                              |

                                               அத்ரி ரிஷி 

                                                     |

                                               சந்திரன் 

                                                     |

                                      புதன் - இளா தம்பதி

                                                     |

                                              நகுஷன் 

                                                    | 

                                          பாண்டியன்



(பாண்டியர் செப்பேடு பத்து என்ற நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது, மேலுள்ள இரண்டு படங்கள் அதில் உள்ளவை). 

  நகுஷன் வடமொழி புராணங்களில் குறிப்பிடப்படும் அரசராவார். இவர் கிருஷ்ண பரமாத்மாவிற்கும் முன்னோர் ஆவார். பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கண்ணனின் முன்னோர் உத்தரபிரதேச மதுராவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் என்பதால் பாண்டியரும் மதுராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறலாம். வடக்கிலிருந்து தமிழகம் வந்தபோது பழைய ஊரின் நினைவாக மதுரை என்று பெயர் வைத்திருக்க வேண்டும். பாண்டியர் செப்பேடுகளில் மதுரை தென்மதுராபுரம் என்று அழைக்கப்படுகிறது என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சின்னமனூர்ச் செப்பேட்டில் 'மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்ற வரி வருகிறது. அதாவது மதுரையில் தமிழ் சங்கம் வைத்ததன் முக்கிய நோக்கம் சம்ஸ்கிருதத்தில் உள்ள மகாபாரதத்தைத் தமிழ் படுத்துவதாகும். இது பாண்டியருக்கும் வடமொழி, மகாபாரதத்தோடு உள்ள தொடர்பை உறுதிப் படுத்துகிறது. தென்கிழக்காசிய நாடுகளில் இந்து பரவிய முக்கிய நாடான இந்தோனேசியாவில் மதுரா என்ற தீவு உள்ளது. இதுவும் கிருஷ்ணரின் மதுராவின் நினைவால் வைத்த பெயராகும். 

சோழரின் பூர்வீகம்

சோழரின் முன்னோர் பற்றி புறநானூற்றிலேயே உள்ளது. வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஸ்ரீராமபிரானை சோழரின் முன்னோன் என்று கூறுகிறது. இது பிற்கால நம்பிக்கை என்று புறந்தள்ள இயலாது. ஏனெனில் ராமரின் முன்னோனான சிபிச் சக்கரவர்த்தியின் மரபினரே சோழர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது.  

புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி யஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக!

இப்பாடலில் புலவர், சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது. இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான  தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்சி தந்து அருளினர் தேவர்கள்).

சிபிச் சக்ரவர்த்தியின் வரலாறு புத்த ஜாதகக் கதைகள், மஹாபாரதம் ஆகியவற்றிலும் கூறப்படுகிறது. மேலும் பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிபிபுரம் சிபிச் சக்ரவர்த்தி ஆண்ட இடம் என்று சில அறிஞர்கள் கூறுவர். இந்தியாவிற்கு வெளியே இந்தோனேஷிய Borobudur கோவிலிலும் சிபிச் சக்ரவர்த்தியின் பெருமை மிக்க வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது. 

சோழரைச் செம்பியன் என்று கூறும் பிற சங்க இலக்கிய சான்றுகள்

 
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் - புறம் 228/9
நாடா நல் இசை நல் தேர் செம்பியன்/ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று - சிறு 82,83
அகப்பா அழிய நூறி செம்பியன்/பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது - நற் 14/4,5
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்/பங்குனி விழவின் உறந்தையொடு - நற் 234/6,7
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் - அகம் 36/15
சினம் கெழு தானை செம்பியன் மருக - புறம் 37/6
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் சோழனின் முன்னோராக மனுநிதிச் சோழனும், சிபிச் சக்கரவர்த்தியும் குறிப்பிடப்படுகின்றனர். 

பாடல்
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயில் கடை மணி நடு நா நடுங்க        65
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன்
அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்


சிபிச் சக்கரவர்த்தி மட்டுமின்றி பல வட இந்திய, புராண அரசர்களைத் தன்  முன்னோர் என்று திருவாலங்காடு செப்பேட்டில் முதலாம் ராஜேந்திரன் கூறுகிறான். முன்னோர் பட்டியல் பின்வருமாறு


  1. சூரியன்
  2. மனு 
  3. இக்ஷவாகு
  4. விகுக்ஷி
  5. புரஞ்ஜயன்
  6. ககுஸ்தன்
  7. கக்ஷிவான்
  8. அர்யமா
  9. அனலப்ரதாபன்
  10. வேனன்
  11. ப்ருது
  12. துந்து
  13. யுவனாச்வன்
  14. மாந்தாதா
  15. முசுகுந்தன்
  16. வளபன் (வளபீ நகரை நிர்மானித்தான்)
  17. பிருதுலகாக்ஷன்
  18. பார்த்திவ சூடாமணி
  19. தீர்க்கபாஹு
  20. ஸாங்கிருதி
  21. பஞ்சபன்
  22. சத்யவிரதன் (ருத்ரஜித்)
  23. உசீரனன்
  24. சிபி
  25. மருத்தன்
  26. துஷ்யந்தன்
  27. பரதன் 
  28. சோழன்
தகவல் தவலாற்றுப்படை 
https://www.tagavalaatruppadai.in/copper-plate-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpy


வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஸ்ரீராமபிரானை சோழரின் முன்னோன் என்று கூறுகிறது. கல்வெட்டின் உள்ள முன்னோர் வரிசையின் படம் கீழே.


                                     பட உதவி - மணி பாரி


இக்கல்வெட்டில் ராமபிரான், லக்ஷ்மணர், பரதன், சத்துருக்கன் ஆகியோரை முன்னோர் என்று வீரராஜேந்திரன் கூறுகிறான். 

ஆகவே, சோழரின் முன்னோர் அயோத்தி உள்ளிட்ட வடதேசங்களைப் பூர்வீகமாக்க கொண்டிருக்க வேண்டும். தவிரவும் இக்கல்வெட்டிலேயே சோழர்கள் தமிழகத்திற்கு ஆர்யதேசத்திலிருந்து பிராமணரோடு வந்ததாக்கக் கூறப்பட்டுள்ளது.

சிபிச் சக்கரவர்த்தி பற்றிக் குறிப்பிடும் பிற சங்க இலக்கியப் பாடல்கள்.


'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,

தபுதி அஞ்சிச் சீரை புக்க,

வரையா ஈகை உரவோன்'

என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43

புறவின் அல்லல் சொல்லிய, கறை அடியானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்

கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!ஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39

புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,சினம் கெழு தானை, செம்பியன் மருக! -புறநானூறு 37

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, - புறநானூறு 46

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை

 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்