ஆரிய பார்ப்பனியத்தை எதிர்த்த சங்ககால அரசர்கள்!

சங்க கால தமிழரசர்களின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு! 



தங்கள் வம்சாவளியைச் சார்ந்த பிற்கால அரசர்களைப் போல் சங்ககால சேர, சோழ, பாண்டியர்கள் பிராமணரை மதிக்கவில்லை... அநியாயமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள்... என்னென்ன கொடுமை என்று வரிசையாகப் பார்ப்போம்.


1) பார்ப்பனர் நோக எதையும் செய்யாதவன் சோழன்.


புறநானூறு 43 வரி 3 -15

பாடியவர் - தாமப்பல் கண்ணனார்

பாடப்பட்டவன் - சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்

பாடல் 

கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ 

தன் அகம் புக்க குறு நடை புறவின்

தபுதி அஞ்சி சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக

நேரார் கடந்த முரண் மிகு திருவின்

தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் 

கொடு மர மறவர் பெரும கடு மான்

கைவண் தோன்றல் ஐயம் உடையேன்

ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது

நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி.


பொருள் - பருந்திடமிருந்து புறாவைக் காக்கத் தன் சதையைத் தந்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபினனே சோழனாகிய நீ. உன் முன்னோர் பார்ப்பனர் நோக எதையும் செய்ய மாட்டார்கள்.


2) நால்வேதமும் வல்ல பிராமணரை பாண்டியன் பணிந்து தலை வணங்கினான்.


இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த 

நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே - புறநானூறு 6


இப்பாடல் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக் கிழார் பாடியது.

இப்படிச் சொன்னதும் மேற்சொன்ன பாடலில் குறிப்பிடப்பட்டவர்கள் தமிழ் பார்ப்பனர், அவர்கள் ஆரிய வேத வேள்வி செய்யும் பிராமணர் அல்லர் என்று உருட்டு உருவான சிலர் கிளம்புவர். அதுவும் பொய் தான் எப்படி?

3) பார்ப்பனர் வழிகாட்டுதல் படி ஆண்ட சேர மன்னன்.

பல் யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்து 24

ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்,

ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும்

அறம் புரி அந்தணர் வழி மொழிந்து ஒழுகி,

பொருள் 

தானாக வேதத்தை ஓதுதல், பிறருக்கு ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் பெறுதல், தருதல் இவையே அந்தணர்களுக்கு மனு முதலிய ஸ்ம்ருத்திகளில் பிராமணருக்குச் சொல்லப்பட்டுள்ள ஆறு கடமைகள் ஆகும். இக்கடமைகளைக் குறைவறச் செய்யும் வைதீக அந்தணர் வழிகாட்டுதலின் படியே சேரன் ஆண்டான் என்று பெருமையாகச் சொல்கிறார் சங்கப் புலவர்.

இப்படி எல்லாம் கடுமையாக ஆரிய பார்ப்பனியத்தை சங்ககாலத் தமிழரசர் எதிர்த்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்