சங்கத்தமிழும் சங்கதமும்!
சங்கத்தமிழில் சங்கதத் தாக்கம்
பொதுவாகவே உலகில் எந்த மொழியும் பிறமொழி கலப்பின்றி இருப்பதில்லை. அந்த வகையில் தமிழில் இன்றைய தேதிக்குப் பல மொழிச் சொற்களும் கலந்து உள்ளன. அவற்றுள் சங்கதம் எனப்படுகின்ற சம்ஸ்கிருத மொழியின் சொற்கள் அன்றாடப் பயன்பாட்டில் இன்றும் அதிகமாகவே இருக்கின்றன. தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பின்னர் பெருவாரியான சம்ஸ்கிருத சொற்கள் நம்முடைய பயன்பாட்டில் இருந்து அகன்று போயின. அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் புழக்கித்திற்கு வந்தன.
வரலாற்றில் ஒரு மொழியின் சொற்கள் மற்ற மொழிகளில் கலப்பது பற்றி அறிந்து கொள்வதென்பது இன்றியமையாத ஒன்றாகிறது. அறிஞர் திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் ‘கழகம்’ என்ற சொல் வடமொழி மூலத்தை உடையது என்று ஒரு தனி கட்டுரையே எழுதி இருக்கிறார் என்றால் இதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவகையில் இந்த கலப்பென்பது ஒரு முதிர்ந்த நாகரிகத்தின் அடையாளமாகக் கூட சொல்லலாம். பட்டினப்பாலையில் காவேரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு மொழி பேசிய வணிக மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கிடைக்கிறது. வாணிபம், படையெடுப்பு, சமயப் பரவல் ஆகிய காரணங்களால் பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் கலப்பது இயல்பான விஷயம்தான்.
ஒப்பீட்டு அளவில் மற்ற தமிழ் இலக்கியங்களைக் காட்டிலும் சங்கத் தமிழ் இலக்கியங்களில் சங்கதக் கலப்பு மிக மிகக் குறைவு தான். என்றாலும் கூட, அவை முற்றிலும் கலப்பற்றவை என்று குறிப்பிட இயலாது. சில கிரேக்க சொற்கள் கூட சங்க இலக்கியங்களில் இருப்பதாக அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் உதாரணம் மத்திகை, சுருங்கை. சங்க இலக்கியங்களில் இருக்கக்கூடிய சங்கதச் சொற்கள் பெரும்பாலும் சமயத் தொடர்பானவை தான். இது வைதீக மதத்தின் பரவல் சங்ககாலத்திலேயே தமிழகத்தின் தொடங்கி விட்டது என்பதைக் காட்டுகின்றது. தொல்காப்பியர் வட சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இலக்கண விதியை நிர்ணயித்துள்ளார் எனும் போது எந்த அளவிற்கு சங்கதச்சொற்கள் தமிழில் புழங்கி இருக்க வேண்டும் என்பதை நம் உணர்ந்து கொள்ளலாம்.
பத்துப்பாட்டில் சங்கதச் சொற்கள்
சிறந்த தமிழறிஞரான இராசமாணிக்கனார் அவர்கள் பத்துப்பாட்டை ஆய்வு செய்து எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்கின்ற தன்னுடைய நூலில் சங்க இலக்கியங்களில் இருக்கின்ற சங்கத சொற்களைப் பட்டியலிடுகிறார் இவற்றில் நாம் தமிழ் என்று நினைக்கும் சில சொற்களும் கூட சங்கத மூலத்தை உடையவை என்று கூறுகிறார். அந்தப் பட்டியல் இதோ. தேசம், ஆரம், குமரி, நிதியம், அமிர்தம், நேமி, உலகம், எந்திரம், மண்டலம், பார்ப்பனர், மிலேச்சர், யவனர், யூபம், நியமம், அந்தி, வேதம், உவமம், ஓணம், ரோகிணி, மோதகம் ஆகியவை.
இது தவிர சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் சில பெயர்களிலும் கூட வடமொழித் தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக பிராமணப் புலவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களில் அவர்களின் கோத்திரப் பெயர் சங்கத மொழியில் தான் அமைந்துள்ளன. உதாரணம் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், கடம்பனூர்ச் சாண்டில்யன், செல்லூர்க்கோசிகன் கண்ணனார், தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், கள்ளில் ஆத்திரையனார், காசிபன் கீரன், பாலைக் கௌதமனார், பெருங்கௌசிகனார், மதுரை இனங்கௌசிகனார். இவற்றில் கௌசிக, ஆத்ரேய, காஷ்யப, கௌதம ஆகியவை வடமொழியில் அமைந்த கோத்திரப் பெயர்கள்.
சில புலவர்களின் பெயர்கள் புராணப் பின்னணியை உடையவை. கேசவனார் (கேசிகன் எனும் குதிரையைக் கொன்றதால் வந்த பெயர்), தாமோதரனார் (வயிற்றில் யசோதை கட்டிய கயிற்றின் தழுப்பினால் ஏற்பட்டது), கோவர்த்தனர் (கோவர்தன மலையைத் தூக்கியதால் வந்த பெயர்) என்பவை கண்ணனின் பெயர்கள். இந்தப் பெயர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் புராணங்கள் பரவிவிட்டதைச் சொல்பவையாக உள்ளன.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் வாணியல், ஜோதிடத்துடன் தொடர்புடைய ராசி, நட்சத்திர, மாதப் பெயர்கள் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை, அவை தமிழில் திரிந்து வழங்கி வருகின்றன. உதாரணமாக தை, பங்குனி உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் வரும் மாதப் பெயர்கள் திஷ்யம் (பூசம்), பல்குனம் ஆகிய வடமொழிப் பெயர்களில் இருந்து தோன்றியவை.
சங்க இலக்கியங்களில் சில இடங்களில் நட்சத்திரப் பெயர்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன. உதாரணம் உரோகிணி –- நெடுநல்வாடை (சில இடங்களில் ரோகிணியின் குறியீடு சக்கரம் என்பதால் சகடம் -என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது). சில இடங்களில் தமிழில் வழங்கப்படுகின்றன. உதாரணம் அனுஷம் என்ற பெயர் அதன் வடிவத்தை முன்னிட்டு ‘முடப்பனை’ எனும் சொல்லால் வழங்கப்படுகிறது.
அறிஞர்களிடையே விவாதம்
ஓரை என்ற சொல் தொல்காப்பியத்தில் வருகிறது. இச்சொல் கிரேக்க மொழியில் இருந்து சங்கதம் வந்து பின்பு தமிழ் மொழியை அடைந்திருக்க வேண்டும் என்று தன் கருத்தை முன் வைத்தார் வையாபுரி பிள்ளை அவர்கள். தொல்காப்பியத்தின் காலத்தை நிர்ணயிக்க இதனையும் ஓர் ஆதாரமாக அவர் கொண்டார். இதை மறுத்து இச்சொல் கிரேக்கத்திலிருந்து நேரடியாக தமிழுக்கு வாணிபத்தின் மூலமாக வந்தது என்று நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள். கடந்த காலத்தில் ஒரு சொல்லின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இவ்வளவு தூரம் விவாதங்கள் நடந்து இருக்கின்றன என்பதை அறியும்போது சொல்பிறப்பியல் ஆய்வு என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதேபோல சங்க இலக்கியத்திற்கு சமகாலத்தவை என்று அறியப்படுகின்ற பழந்தமிழ் பிராமி கல்வெட்டுகள், பானை ஓட்டுப் பொறிப்புகள் பெரிய அளவில் சங்ககத் தொடர்பைப் பெற்றவையாகத் தெரியவில்லை. சங்ககத் தொடர்புள்ள சிலவற்றை அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பட்டியலிட்டுள்ளார். சமண சமயத் தொடர்பு மிக்கவையான கல்வெட்டுகள், பானை ஓட்டுப் பொறிப்புகளில் பிராகிருத சொற்களே காணப்படுகின்றன. பானை ஓடுகளில் கிடைக்கின்ற பெயர்கள் 50 சதவீதம் பிராகிருதம் மொழியைச் சார்ந்தவை என்று அறிஞர் சுப்பராயலு அவர்கள் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்களில் மிக அதிகமான முறை பயன்படுத்தப்படுகின்ற பெயர் என்று பார்த்தால் அது கண்ணன் என்கின்ற பெயர்தான். இது பிராகிருத மொழி ‘கண்ஹ’ என்பதிலிருந்து வந்துள்ளதாக சிலர் கூறுவதுண்டு. புறநானூற்றில் அவ்வையார் எழுதிய ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்கின்ற பாடல் பாலி மொழியில் அமைந்த தம்மம்பபுத பாடலின் தமிழாக்கம் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுவர்.
சமகாலத்தவையான சங்க இலக்கியங்கள், பானை ஓட்டுப் பொறிப்புகள் ஆகியவற்றுக்கு இடை இந்த வேறுபாடு இருப்பது ஏன் என்பது ஆய்வுக்கு உட்பட்டது.
++++++++++++++++++++++++++++++++
1) ஸம்ஸ்க்ருதத்தின் பழமையைச் சொல்லும் சங்கத்தமிழ்!
சங்கப்புலவர்களின் பெயர்கள் சில
1) கோவர்த்தனர்
2) கேசவனார்
3) தாமோதரனார்
இந்தப் பெயர்கள் வடமொழியில் உள்ளவை. இவற்றின் பொருளை அறிய இந்து சமய ஸம்ஸ்க்ருத புராணங்களைத் தான் தேட வேண்டும்.
1) கோவர்தன கிரியைத் தூக்கியதால் கண்ணன் பெற்ற பெயர்.
2) கேசிகன் எனும் குதிரை வட அசுரனைக் கொன்றதால் கண்ணன் பெற்ற பெயர். (கூந்தல் குதிரை என்று இதை கலித்தொகை கூறும்).
3) தாம + உதரம் ... யசோதை கயிற்றால் கட்டியதால் கண்ணன் வயிற்றில் தழும்புண்டானது ... அதைக் குறிக்கும் பெயர்.
கிருஷ்ணரின் வடமொழிப் பெயர்களைத் சங்கத் தமிழ்ப் புலவர் தம் பெயர்களாகக் கொண்டுள்ளனர்.
இதிலிருந்து தமிழில் சங்க இலக்கியம் தோன்றும் முன்பே இந்து மதமும், கூடவே வடமொழியும் தமிழகம் வந்துவிட்டன என்று தெரிகிறது. இந்தப் பெயர்களுக்கான விளக்கங்கள் ஸம்ஸ்க்ருத புராணங்களில் தான் உள்ளன. எனவே அப்புராணங்கள் சங்க காலத்திலேயே வாய்மொழியாகவோ அல்லது எழுதப்பட்டோ தமிழகம் வந்தடைந்துவிட்டன என்பதை உணரலாம். வடமொழியின் பழமைக்குச் சிறந்த சான்றாக சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன.
2) பழந்தமிழ் நூல்களில் மேலும் சில சம்ஸ்கிருத சொற்கள்
யவனம் (புறநானூறு, 56 : 18)
யூபம் (புறநானூறு, 15 : 21)
அரமியம் (அகநானூறு, 122 : 5)
ஆதி (குறுந்தொகை, 293 : 4), (திருக்குறள், 1)
யாமம் (குறுந்தொகை, 6 : 1)
உரோகிணி (நெடுநல்வாடை, 163)
சாலேகம் (நெடுநல்வாடை, 125)
நேமி (கலித்தொகை, 105 : 9)
ஆரம் (கலித்தொகை, 79 : 12)
காரணம் (கலித்தொகை, 60 : 12)
கமலம் (பரிபாடல், 2 : 14)
போகம் (பரிபாடல், 5 : 79)
மிதுனம் (பரிபாடல், 11 : 6)
அவுணர் (திருமுருகாற்றுப்படை, 59)
அங்குசம் (திருமுருகாற்றுப்படை, 110)
பாக்கியம் (திருக்குறள், 1141)
3) மாபாரதம் தமிழ்படுத்த சங்கம் வைத்த பாண்டியர்
பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்ற வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.
சங்கங்கள் இருந்தன என்பதற்கு இலக்கியங்கள் தாண்டிய வலுவான வரலாற்று சான்று என்று சொன்னால் அது சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு ஆகும். இது 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இச்செப்பேட்டில் 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்று பாண்டியர் புகழ் பாடப்படுகிறது. அதாவது பாண்டியர்கள் மதுராபுரி (மதுரையில்) சங்கம் வைத்ததே மகாபாரதத்தை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கவே என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதம் எதுவென்று தெரியவில்லை. அது தொலைந்திருக்கலாம். ஆனால் சங்க இலக்கியத்தில் காணப்படும் மகாபாரத கதைக் குறிப்புகளும், சங்க நூல்களின் கடவுள் வாழ்த்து பாடியவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற குறிப்பும் சங்க காலத்திலேயே மகாபாரத தமிழ் மொழிபெயர்ப்பு இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.
சிறந்த தமிழ் அறிஞரும், பேராசிரியருமான திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் பஞ்சதந்திர மொழிபெயர்ப்பு என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
பஞ்சதந்திர கதைகள் என்பது வட இந்தியாவில் விஷ்ணு சர்மா என்பவரால் எழுதப்பட்டதாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்து இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
பாரசீக நாட்டு மன்னன் இந்த நூலின் புகழைக் கேட்டு தன்னுடைய ஆஸ்தான வைத்தியரை அனுப்பி பஞ்சதந்திரக் கதையைப் பாரசீக நாட்டிற்குக் கொண்டு வந்தார். அங்கு பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர்களிடமிருந்து அரேபியர்கள் தங்களுடைய மொழியில் பஞ்சதந்திர கதைகளை மொழி பெயர்த்துக் கொண்டார்கள்.
கி.பி. 12 - 13ஆம் நூற்றாண்டுகளில் ஹீப்ரூ, லத்தின், கிரேக்கம் முதலிய மொழிகளில் பஞ்சதந்திரக் கதை மொழிபெயர்க்கப்பட்டது. பின்னால் ஆங்கிலம் பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இப்பேற்பட்ட சிறப்புடைய இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய அவசியத்தையும், முறையையும் திரு. வையாபுரி பிள்ளை அவர்கள் கூறுகிறார்.
இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் கூட சிலப்பதிகார காலத்தில் பஞ்சதந்திர கதைகள் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் வருகின்ற 'கீரிப்பிள்ளையும் பிராமணியும்' என்பது என்ற கதை உண்மையில் பஞ்சதந்திர கதையே ஆகும். அதுபோல பஞ்சதந்திரக் கதைகளில் வருகின்ற ஸ்லோகத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக ஒரு நாலடியார் பாடல் உள்ளதைப் பேராசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். கட்டுரையின் பக்கங்கள் கமெண்டில்!
இதிலிருந்து வடமொழியில் அமைந்துள்ள பஞ்சதந்திர கதையின் பெருமைகளையும், அதை இயற்றியவரின் மேதைமையும் உணர்ந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment