தமிழரசர்களின் இமயப் படையெடுப்பு உண்மையா?

தமிழரசர்கள் வட இந்தியா மீது படையெடுத்ததும், இமயம் வரை சென்று தங்கள் சின்னங்களைப் பொறித்ததும் நீண்ட காலமாகக் கூறப்பட்டு வரும் வெற்று நம்பிக்கைகள் என்று புறந்தள்ள இயலாது. சங்க இலக்கியத்திலிருந்து கலிங்கத்துப் பரணி வரை இதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.





கீழ்க்காணும் செய்திகள் தமிழ் அறிஞரான திரு. மு. இராகவ ஐயங்கார் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னாரிலன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ’ஆராய்ச்சித் தொகுதி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 




இனி ஆதாரங்களைப் பார்ப்போம் 

பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியம் முழுக்கவே சேரரைப் பற்றிப் பாடுகிறது. அதில் ஒரு பத்துப் பாடல்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றியவை. இவனது பெயரே இவன் இமையத்தை வரம்பாக அதாவது எல்லையாக உடையவன் என்பதைக் காட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் (11 வரி 23 - 25) தெளிவாக இச்சேர மன்னன் ஆரியரின் இமயம் முதல் தென் குமரி வரையுள்ள மொத்த பாரத நாட்டில் உள்ள எல்லா அரசரும் அஞ்சும்படி ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

”ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் 

தென்னம் குமரியொடு ஆயிடை

மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே”

 

அதே போல அகநானூறு 396ஆம் பாடல் (வரி 16 -20)

”ஆரியர் அலற தாக்கி பேர் இசை

தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து

வெம் சின வேந்தரை பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே”

 என்ற வரிகளில் வட நாட்டினர் அலறும்படியாக தாக்கி, இமயத்தில் 

சேரன் வில் சின்னத்தைப் பொறித்தான் என்று கூறப்பட்டுள்ளது


 சேரனைப் போல் சோழனும் இமயத்தை வென்றுள்ளான். 

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் 12ஆம் நுற்றாண்டைச் சேர்ந்தது. இது முதலாம் குலோத்துங்க சோழனின்  கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல். இதில் சங்க கால சோழனான  திருமாவளவன் என்னும் கரிகால சோழன் இமயத்தில் புலிச் சின்னம்  பொறித்த செய்தி கூறப்பட்டுள்ளது. 


”செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் 

இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை

பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் 

பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே” - கலிங்கத்துப்பரணி


பாண்டியர்கள் இமயத்தில் தன் கயல் சின்னத்தைப் பொறித்தைப் போல் திருமால் தன் (பெரியாழ்வார்) தலை மீது தன் திருவடியைப் பொறித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார். அப்பாடல் கீழே 


பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்”

பெரியாழ்வார் திருமொழி (469)


ஆகவே தமிழ் மூவேந்தருமே இமயம் வரை வென்றுள்ளனர் என்று தெரிகிறது. அவர்கள் பலமுறை சென்றுள்ளனர் என்பதும் இலக்கியச் சான்றுகள் மூலம்  தெரிகிறது. 


சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் 

”தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்

செரு வேட்டு புகன்று எழுந்து

மின் தவழும் இமய நெற்றியில்        

விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்”

என்ற வரிகளில் மூவேந்தரும் தம் சின்னத்தை இமயத்தில் பொறித்த செய்தியை இளங்கோவடிகள் பதிவு செய்கிறார். 


எனில் எதற்காகச் சென்றார்கள் என்பதற்கான காரணம் சிலப்பதிகார உள்ளது. இதை இராகவ ஐயங்கார் மேற்கோள் காட்டுகிறார். அதாவது ஒரு சுயம்வரத்தின்போது வட நாட்டு மன்னர்கள் பலர் சேர்ந்து தமிழரின் வீரத்தைப் பற்றி குறைத்துப் பேசிக்  கொண்டனராம். இதனால் கரிகால சோழனின் தலைமையில் மூவேந்தரும் இமயம் நோக்கிப் படையெடுத்துள்ளனர்.




சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் காணப்படும் கீழ்காணும் பாடலில்

கரிகால்சோழன் புண்ணிய திசையாகிய வடக்கு நோக்கிச் சென்று மதக, அவந்தி, அவந்தி நாடுகளை வென்ற செய்தி உள்ளது. 

”புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய பகை விலக்கியது இ பயம் கெழு மலை என இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் ”- புகார் காண்டம்

இலக்கியங்கள் தவிர்த்து மற்றோரு ஆதாரமும் இதற்குண்டு. சோழன் வங்கதேசம் வழியாக சிக்கிம் பகுதியில் உள்ள இமயத்திற்குச் சென்றுள்ளான். திபெத் பகுதிக்குச் செல்லக்கூடிய இவ்வழிக்கு சோழா பாஸ் (Chola pass) என்றும் இப்பகுதி மலைக்கு சோழா மலை (Chola range) என்றும் பெயர். ஆகவே மேற்குறித்த ஆதாரங்களினைக் கொண்டு தமிழ் அரசர்களின் இமயப் படையெடுப்பின் வரலாற்று உண்மைத் தன்மையை உணரலாம். 


                    


                             படம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள சோழா பாஸ்

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்