தமிழ் இலக்கியங்களில் ராமபிரான்

தமிழ் இலக்கியங்களில் ராமபிரான்

தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம்  மாயோனாகிய திருமாலே ஆவார்.

மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் 
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே 
 -  தொல்காப்பியம் பொருள்.அகத் 5

தமிழரின் முதல் தெய்வமான மாயோனின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளைக் காண்போம்.




அகநானூறு

நெய்தல் நில நகரம் எவ்வாறு அமைதியடைந்தது என்பதைக் கூற வந்த சங்கப்புலவர்  அதற்கு தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த இராமாயணத்தில் இருந்து ஒரு காட்சியை உவமிக்கிறார் .

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே

 (அகநானூறு 70: 13-17).

அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி எழுப்பித் தொல்லை செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற அமைதியை நகரம் அடைந்தது என்கிறான்... இங்கே வெல்போர் ராமன் என்று கூறி ராமன் எல்லா போரில் வெற்றி பெறக்கூடிய பெரிய வீரன் என்று புகழ்கிறார்! இதன்மூலம் ஸ்ரீராமன் வாழந்ததையும், வானர சேனையோடு தனுஷ்கோடி வந்ததையும், இலங்கை மீது படை எடுத்ததையும் உண்மையில் நடந்த வரலாறே என சங்கப்புலவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்!

புறநானூறு

இராவணன் தமிழனா? அசுரனா?

இராமர் கம்பரால் தமிழருக்கு அறிமுகமானவரல்லர்.
ஸ்ரீராம்பிரானின் வரலாற்றை சங்கத்தமிழர் நன்று அறிந்திருந்தனர். எந்த அளவு என்றால் வெகு சாதாரணமாக உவமையாகப் பயன்படுத்தும் அளவு.

ஆதாரம்-

இளஞ்சேட்சென்னி என்ற சோழ மன்னனைப் பாணர்கள் பாடி அணிகலன்களும் செல்வமும் பரிசில் பெறுகின்றனர்.இதுவரை இதுபோன்ற விலை உயர்ந்த அணிகளை அவர்கள் பார்த்ததில்லை போலும்.அதனால்  தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும், காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொண்டனராம். இச்செய்யகை வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் இருந்ததாம்... எப்படி?

கடுந்தெறல் இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

புறநானூறு ( 378: 18-22)


கடுமையான போர்திறன் உடையபவன் ராமன். அவனது பத்தினியான சீதையை அரக்கன் ராவணன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது தான் சென்ற பாதையைத் தன் கணவன் கண்டுகொள்ள வேண்டுமென்று சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இதுதான், மிகத் தெளிவாக புறநானூற்றுத் தமிழன் இராவணனை  அரக்கன் என்றுள்ளான்.தமிழனென்று குறிப்பிடவில்லை. அதே போல வெல்போர் ராமன் என்று ராமனைப் போரால் வெல்ல முடியாது அதனால் தான் இராவணன் கோழைத்தனமாக அவன் மனைவியான சீதையைக் கடத்தினான் என்று சங்கப் புலவர் குறிப்பால் உணர்த்துகிறார்.

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்


அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை

காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

சரி ராமர் திருமாலின் அவதாரம் என்று தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளார்களா என்று பாப்போம் . ஏன் என்றால் இன்று சிலர் திருமால் மாயோன் தமிழர் முப்பாட்டன் ...ஆனால் ராமர் வடநாட்டுத் தெய்வம் என்கின்றனர். அதற்கு மறுப்பு இதோ...


ஸ்ரீராமனைப் போற்றும் சிலப்பதிகாரம்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

இரண்டு அடிகளால் மூவுலகும் அளந்தவன்- (வாமன அவதாரம்). அதே அடிகளுடன் லக்ஷ்மணனோடு வனவாசம் சென்றவன், தொன்மை மிக்க இலங்கையை வென்றவன் (இராவணனை வென்ற ஸ்ரீராமன்)... இத்தகைய சிறப்புடையோன் ஸ்ரீராமன் பெருமைகளைக் கேட்காத காதுகளும் காதுகள் தானா? திருமால் புகழ் கேட்காத செவிகளும் செவிகளா என்று சிலப்பதிகாரம் கேட்கின்றது.

இது  ஆய்ச்சியர் குரவையில் வரும் பாடல்களுள் ஒன்று. திருமாலின் பெருமைகளை முல்லை நிலத் தமிழ் மக்களான ஆயர்கள் பாடி வணங்கினர்.

அதேபோல சோழ நாட்டை விட்டு மதுரைக்கு வந்த கோவலன் மற்றும் கண்ணகி தம்பதியர் மிகுந்த வேதனையில் இருந்தனர் அவர்களுக்கு ஆறுதல் கூற வந்த கவுந்தி அடிகள் எனும் சமணப் பெண்துறவி இவ்வாறு கூறுகிறார்.

தாதை ஏவலின் மாதுடன் போகிக் 
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் 
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ?
மதுரைக் காண்டம் ஊர் காண் காதை வரிகள் 45 -49

அதாவது தனது தந்தையான தசரதரின் ஆணையை ஏற்றுக்கொண்டு தன் மனைவியுடன் கானகம் சென்று அங்கே தனது மனைவியை இராவணன் கடத்திச் செல்ல அதனால் பெரும் துயரை அடைந்த ராமன் யார் வேத முதல்வனான ப்ரம்மதேவரையே படைத்த திருமால் தானே? அது உனக்குத் தெரியதோ? இது (ராமாயணம்) நீண்டகாலமாக மக்களால் அறியப்பட்ட விஷயம் தானே? அதாவது என்ன தான் முழுமுதல் தெய்வமான திருமலாக இருந்தாலும் மனிதனாகப் பிறந்தால் துன்பம் என்பது இயல்புதானே என்று கோவலனைத் தேற்றுகிறார்! இதன் மூலம் ஸ்ரீராமனைத்  திருமாலின் ஆவதரமாகவே பழந்தமிழர் போற்றினர் என்பதைத்  தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரமே உறுதி செய்துவிடுகிறது. அதோடு நெடுமொழி என்று சொல்லி ராமாயணத்தின் பழமையையும் கூறுகிறது.

சிலப்பதிகாரம்,அகநானூறு, புறநாநூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் தோன்றும் முன்னரே ராமாயணம் தமிழ் மக்களிடையே பிரபலமாக இருந்துள்ளது என்பதை அறிவுடையோர் ஏற்பர்.

அதேபோல ராமாயணத்தின் படி ஸ்ரீராமபிரான் கட்டியதே ராமர் பாலம் ஆகும்! இதை தமிழின் இரண்டாவது காவியமான மணிமேகலை உரைக்கிறது!

மணிமேகலை

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)


பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்), அவர் இலங்கை சென்று ராவணனை வெல்ல பாலம் காட்டினார். அப்போது
கடலை வழிமறிக்க வானரங்கள் கொண்டுவந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்ததுபோல என்று உவமை கூறப்பட்டுள்ளது  .


ஆகவே ராமசேது என்பது உண்மையில் ராமரால் கட்டப்பட்டதே என்பதைப் பண்டைய தமிழரே பதிவு செய்து வைத்துள்ளனர்!


இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்


மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
என்று வருகிறது.
அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சீவக சிந்தாமணி

அதே போல் சீவக சிந்தாமணியில் சீவகனது வில்திறனை ராமனது திறனோடு ஒப்பிடுகிறான் விஜயன் எனும் அரசன்.

பாடல்

மராமரம் ஏழும் எய்த
            வாங்குவில் தடக்கை வல்வில் இராமனை வல்லன் என்பது       
            இசையலால் கண்டதில்லை

 சீவகனின் வில் திறமையைக் கண்ட விசயன் அவனைப் புகழ்கிறான். கிஷ்கிந்தையில் மராமரங்கள் எழினையும் ஒரே அம்பால் வீழ்த்திய இராமனின் திறமையை கேள்விப்பட்டிருக்கிறோம் , இன்று உன் மூலம் அதனைக் கண்டோம் என்கிறான்.


பழமொழி நானூறு

 257 வது பாடல்

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.

பொருள் -
இலங்கைக் கிழவற்கு இளையான் - இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொலர் தார் இராமன் துணையாக - பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் போந்து - தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே போந்து இறையாயதும் பெற்றான் - இலங்கைக்கே தலைவனாய அரசபதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியாரைச் சார்ந்து - பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, கெழீஇ இலார் இல் - (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.

ஆகவே ராமாயணம் என்பது காலம்காலமாக தமிழரால் அறியப்பட்ட காவியமே! என்று ஆணித்தரமாக நிறுவலாம்!




இன்று முதல் கந்தர் சஷ்டி விரதம் ஆரம்பம்! சரியாக நரகாசுரனை மாயோன் கண்ணன் வென்ற நாளான தீபாவளி முடிந்து ஆறாவது நாளில் சேயோன் முருகன் சூரனை வதம் செய்கிறார்! ராமாயணமும் கந்தபுராணமும் பல ஒற்றுமைகள் உடையவை!

ஆனால் பாருங்கள் ராவணனை முப்பாட்ன் என்று கூறிய எவனாவது சூரனை முப்பாட்டன் என்றானா? இமயத்தில் பிறந்த முருகன் தமிழ்க் கடவுளாகும் போது அயோத்தியில் பிறந்த ராமர் ஆரியரானது எப்படி? முருகன் சிவந்தவர்... ராமர் தான் தமிழரது கருமை நிறத்தவர்! சங்க இலக்கியங்கள் சேயோனை விட மாயோனை அதிகமாகக் கொண்டாடுகின்றன!

நாம் என்ன தான் சொன்னாலும் சரி இங்கே ராமரையும், கிருஷ்ணரையுமே எதிர்ப்பர் ... காரணம் அவர்களே இந்தியாவை இணைக்கிறார்கள்! முருக வழிபாடு வடக்கிலும் உண்டு இருந்தாலும் கூட வெகுஜனத் தன்மை பெற்றோர் ராமரும் கிருஷ்ணருமே! தமிழ்நாட்டில் கூட கந்தபுராணம் தெரிந்தவர்களை விட ராமாயணம் தெரிந்தவர்களே அதிகம்! இப்படி எல்லாம் எதிர்ப்பர் என்று அறிந்தோ என்னவோ அருணகிரிநாதர் அன்றே முருகனுக்குரிய பாடலில் ராமரையும் பாடி வடக்கு தெற்கு சைவம் வைணவம் எல்லாவற்றையும் இணைத்துவிட்டார்!



Comments

  1. அட்டகாசமான இலக்கிய சான்றுகளுன் கூடிய பதிவு.
    பாரதம் என்பது இமயம் முதல் இலங்கை வரை கூட ஒரே சமயத்தையும் ஒரே மாதிரியான கடவுள்களையும் கொண்டதே என்று நிறுவுகிறது பதிவு. இந்தியா என்றுமே இந்து தேசமே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்