கழகம் தமிழ்ச் சொல்லா?

 கழகம் தமிழ்ச் சொல்லா?


சங்கம் என்பது வடமொழிச் சொல் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்ட அதே பொருளுடைய கழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சொல்லின் மூலம் ஆய்வுக்குறியது. இது பற்றி தமிழ் ஆய்வாளர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இக்கட்டுரையை அவரது தொகுப்பு நூலான தமிழின் மறுமலர்ச்சி நூலில் படிக்க நேர்ந்தது. 

பொதுவாக ழகரம் வந்தாலோ, அல்லது நீண்ட காலமாகத் தமிழில் படன்படுத்தப்பட்டு வந்தாலோ அதைத் தமிழ்ச் சொல் என்றே முடிவு கட்டி விடுகிறோம். ஆனால் அது சரியானதல்ல என்று சொல்வது போல் இக்கட்டுரை அமைந்துள்ளது. 


கட்டுரை 

// கழகம்

இக்காலத்தே கல்வியோடு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கழகம் வழங்குகிறது. இச்சொல் திருக்குறளில்,


கவறுங் கழகமுங் கையுந் தருக்கி இவறியார் இல்லாகி யார். (935)

என வந்துள்ளது.


'கழகமாக ஏகவின்பக் காமக் கவறாடல் இயைவதன்றே'

எனச் சிந்தாமணியில் (1657) உள்ளது.


ஓதுசாலையும் சூதாடு கழகமும், என்பது பெருங்கதை (II, 7,132).


தவலில்தண் கழகத்துத் 

தவிராது வட்டிப்பக் 

கவறுற்ற வடுவேய்க்குங் 

காமர்பூங் கடற்சேர்ப்ப,

எனக் கலித்தொ கையில் (136) பயின்றுள்ளது. 


இதுவே இச்சொல்லின் முதற் பிரயோகம் என்று தோன்றுகிறது. வேதச் சொல்லாகிய 'களம்' என்பது புறநானூறு முதலிய மிகப் பழைய சங்க நூல்களிற் காணப்படாமல், இச்சொல் கலித்தொகை முதலிய பிற்பட்ட இலக்கியங்களில் மாத்திரம் காணப்படுவது அது பிற்பட்ட வழக்கென்பதனை நன்கு புலப்படுத்துகிறது.


இவ்விலக்கியங்களில் சூதாடுமிடத்திற்குப் பெயராக இச்சொல் வழங்கியுள்ளது. இது காலகதியில் வேறு பல இடங்களுக்கும் பெயராயிற்று. 

திவாகரத்தில், 

செல்லல் தீர்க்கும் பல்புகழ்ச் சேந்தனில் வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும்  மல்லும் சூதும் படையும் மற்றும் கல்விபயில் களமும் கழக மாகும்,

என்று வருவதனால் இதனை உணரலாம்.

இங்ஙனம், பொருள் விரிவுற்றது மிக்க பயனுடையதே எனினும், பிற பொருள்களுக்கு இலக்கிய வழக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தே தான் உள்ளது. சூதாடுமிடத்தில் கூட்டம் இருத்தல் இயல்பாதலால் கூட்டம் 'திரள்' என்ற பொருள் முதல்முதற் பிறந்ததாதல் வேண்டும். 'கழக மேறேல் நம்பீ' என்ற திருவாய் மொழியில் (6,2,6) 'திரள்' என்பதே பொருள். இப்பொருளை நுணுகி கரித்து ஈடு என்னும் வியாக்கியானம், 'ஓலக்கம்' என்று யலங் பொருள் கூறும். சூது போர் என்பது வழக்காதலால் மற்போர், வாட்போர் முதலிய பிற வகைப் போர்கள் நிகழும் இடத்திற்கும் இச்சொல் வழக்கிற்குரியதெனத் திவாகரர் கருதினர். ஆனால், பண்டை இலக்கியப் பிரயோகம் இல்லை. மலையாள மொழிந்த திராவிட மொழிகளில் இச்சொல் காணப்படவில்லை. பின்னர், நாவலர்கள் கூடி ஆராய்ந்து வாது செய்யும் இடத்திற்கும் இது பெயராய் அமைந்தது. இதற்கும் முற்காலப் பிரயோகம் காண்டல் அரிது. இதன் பின்னர், கல்வி பயிலுமிடத்திற்கு இச்சொல் வழங்கலாயிற்று. 'சுந்தனை யனையவர் கலைதெரிகழகம்’ என்பது இராமாயணம் (நாட்டுப். 48).


மேற்கூறிய பொருள் வரலாற்றால் கழகம் என்னும் சொல் முதலில் சூதாடுமிடத்திற்குப் பெயராகி, பின் நாள டைவில் பொருளுயர்வு பெற்று இக்காலத்தே நூல் முதலிய ஆராய்ச்சி நிகழுமிடத்திற்குப் பெயராய் அமைந்து விட்டமை தெளிவாம். செந்தமிழ்க் கழகம், பல்கலைக் கழகம் முதலிய நவீன வழக்குக்கள் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன. வெகுகாலமாக வழக்கற்றுப் போன இச்சொல் உச்சரிப்பதற்கு எளிதாய் இருத்தல் பற்றியும், தமிழுக்கே சிறப்பென்று கருதும் ழகரம் பயின்றிருப்பது பற்றியும், தமிழ்ப்பற்று மிக்க சில அறிஞர்கள், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மீண்டும் இதனை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். பொதுப்படச் சங்கம், சபை என்ற பொருளில் இப்போது வழங்குகிறது.


இச் சொல்லுக்கு எங்கிருந்து எவ்வாறு சூதாடும் இடம் என்ற பொருள் வந்தது? சூதாடுதல் உலகம் முழுவதும் பரவியிருந்த ஒரு பொழுது போக்காக இருந்தாலும் பாரத நாட்டின் வட பகுதியில் மிகப் புராதன காலத்திலேயே அது வழங்கியதென்று நாம் கருதலாம். 'வேத காலத்து இந்தியர்களுக்குச் சூதும், குதிரைப் பந்தயமும் முக்கியமான பொழுது போக்குகள்' என்றார் மக்டாநல்டு (Vedic Index: Aksa) பாரதக் கதையும் இதற்குச் சான்றாகும். சூதாட்டு ஆதியில் வடநாட்டு வழக்கமே என்பது 

‘சூது’என்ற தற்பவச் சொல்லினாலும் உணரலாம். 'த்யூத' என்பது இதன் வடமொழி ரூபம்.


சங்க காலத்தில் மக்கள் சூது பொருதார்கள் என்ற வரலாறு, மிக மிக அருகியே காணப்படுகிறது. புறநானூற்றில் இரண்டு இடங்களில் சூதாட்டு குறிக்கப்படுகிறது. ஓரிடத்தில் (43) நலங்கிள்ளி கண்ணன் என்ற என்ற அரசனும் தாமப்பல் அந்தணனும் சூதாடியதாசச் சொல்லப் படுகிறது. பிறிதோர் இடத்தில் (52).

’நரைமூ தாளர் நாயிடக் குழிந்த                                                                                            வல்லி னல்லகம் நிறையப் பல்பொறிக்                                                                          கான வாரணம் ஈனுங்காடாகி                                                                                        விளியும் நாடுடை யோரே’.

என வருகின்றது. இங்கே 'வல்', 'நாய்' என்பன சூதாடு கருவிகள். இச்செய்யுளில் வடபுல மன்னர் வாட என வருதலாலும், கந்தம், பலி, வாரணம் முதலிய வட சொற்கள் வருதலாலும், தமிழ் நாட்டினரும் வட நாட்டினரும் நெருங்கிப் பழகியதன்பின் இச்செய்யுள் தோன்றியதாகும்.


வட மொழியில் இச்சொல்லோடு தொடர்புடையது யாதேனும் காணப்படுகிறதா? அமர நிகண்டு சூதாட்டத்தில் வைக்கும் பந்தயத்திற்கு 'க்லஹு' என்று பெயர் கூறும். இச்சொல்லும் பொருளும் பாணினீயத்தில் 'அக்ஷேஷு க்லஹ’, (III, 3-70), என்று காணப்படுகிறது. (பிற இடங்களில் கொள்ளப்படும் பொருளை 'க்லஹ’ எனக் கூறினும்) சூதாட்டத்தில் (கொள்வதை), 'க்லஹு' (என்க)' என்பது பொருள்' அதர்வவேதத்தில் (IV, 28,1) சூது கருவி உருட்டுதலுக்கும் சூதாட்டத்திற்கும் பெயராக வந்துள்ளது. இச்சொல்லின் பொருள் பலபடியாக விரிந்து வந்துள்ளமை மானியர் உவெல் லியம் இயற்றிய அகராதியில் அறியலாகும். இதுவே 'கழகம்' என்பது.உருபு கொண்டும் பொருளின் தொடர்பு கொண்டும் துணியத் தகும்.


ஆனால், தமிழில் சூதாடும் இடத்திற்கே இச்சொல்லை முதல் முதலில் வழங்கலாயினர். 'மாயச் சூது', 'வஞ்சனைச் சூது' என்று இவ்வகை ஆட்டத்தை நம்மவர்கள் குறிப்பிடுவர். 'த்யூதம் சலயதாமஸ்மி' என்பது என்பது கீதை (X, 36). இச்சூது நிகழுமிடத்தைக் குறிக்க வந்த இச்சொல்லும் தனித் தமிழ்ச் சொற்போல மாய வேஷம் பூண்டு நம்மை மயக்கிவிட்டது. சூதாட்டத்தை அடியோடு மறந்து சிறந்த பொருளில் இச்சொல்லை நம்மவர்கள் பிற்காலத்தில் வழங்கிவிட்டனர்.


இழிவுப் பொருண்மை (Degradation) உடைய ஒரு சொல் உயர்வுப் பொருண்மை  (Elevation) வருதல் சொற்பொருள் வரலாற்றில் நன்கு தெளியப்பட்ட நெறியாகும். நைஸ் (Nice) என்ற ஒரு ஆங்கிலச் சொல் அறியாமை அல்லது மடமை என்ற பொருளில் ஆதியில் வழங்கப்பட்டது. இப்பொழுது 'நேர்த்தி', அல்லது 'சீர்மை' என்ற பொருளுடையதாய் உயர்ச்சி பெற்றுவிட்டது. இங்ஙனமே பல மொழிகளிலும் இந்நெறி காணப்படுகிறது. 'கழகம்' என்ற சொல் இவ்வகையான உயர்வுப் பொருண்மை நெறிக்குத்தக்க உதாரணமாகும். பிறிதோர் உதாரணமாக 'களவு'  என்ற சொல்லைக் காட்டலாம். இது 'திருட்டு' என்று முதலிற் பொருள்பட்டு, பின்னர் அகம் பற்றிய நூல்களில், 'காந்தருவ மணம்' அல்லது 'அன்பு மணம்' என்று பொருள் பெற்றுச் சிறந்து விட்டது.


சொற்பொருள் வரலாற்றில் வேறு நெறிகளும் உள்ளன. இவற்றுள் பொதுப் பொருண்மை (generalisation), சிறப்புப் பொருண்மை (Specialisation), இழிவுப் பொருண்மை (Degradation, degeneration), சுற்றுநிலைப் பொருண்மை (Radiation), மாற்றுப் பொருண்மை அல்லது எதிர்த்தலைப் பொருண்மை (Transference), மங்கலப் பொருண்மை (Euphemism) முதலியன அறியத்தக்கன. சொற்பொருளாராய்ச்சியை இந்நெறிகள் பற்றி நிகழ்த்துவது பெரும் பயனளிக்க வல்லது.


அடிக்குறிப்பு 

'வல்', 'நாய்' 

*இச்சொற்கள் தொல்காப்பியத்திலும் (புள்ளிமயங்கு, 78.79) காணப்படுகின்றன.

'வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே’.

'நாயும் பலகையும் வரூஉங் காலை      ஆவயின் உகரங் கெடுதலும் உரித்தே   உகரங் கெடுவழி அகரம் நிலையும்’.

//


வையாபுரிப் பிள்ளை அவர்கள் கட்டுரையின் மூலநூல் பக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.







Comments

Popular posts from this blog

மாயோன்

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்