முதல்வரின் ஓணம் வாழ்த்து - சில கேள்விகள்

 சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயபாரதத்தில் வெளியான எனது கட்டுரை. ஓணத்திற்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வருக்குச் சில கேள்விகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. 


கட்டுரையாளர் - விஷ்ணு சர்மா Vishnu Sharma 

தலைப்பு - ஹிந்து பண்டிகையும் திராவிட வாழ்த்தும்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஹிந்து பண்டிகைக்கு இவர் வாழ்த்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் கூடவே நமக்கு இங்கே சில கேள்விகள் எழுகின்றன.


1) வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவரா மாபலி?

வாழ்த்தின் இரண்டாவது பத்தியில் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட மன்னர் என்று மகாபலியைக் குறிப்பிடுகிறார் முதல்வர். இதற்கு என்ன ஆதாரம்? மகாபலி சக்கரவர்த்தியைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், அவரை பிரகலாதத்தாழ்வார் என்று அழைக்கப்படுகின்ற பரம வைணவரின் பேரன் என்கின்றன.

அவர் இந்திரப் பதவியைக் கேட்டு யாகம் செய்ய அந்தப் பதவியை அடுத்த மன்வந்தரத்தில் தருவதாக வாக்களித்து, குள்ள பிராமண உருவில் வந்த பெருமாள் அவருக்கு பாதாள உலகை ஆளுகின்ற வரத்தை தந்தார். வந்திருப்பவர் திருமால் தான் என்பதை அறிந்தும்கூட, அவருடைய பக்தன் என்ற முறையில் அவருடைய திருவடியைத் தன்னுடைய சிரத்தின் மீது ஏற்றுக்கொண்ட பரம பாகவதர் மகாபலி சக்கரவர்த்தியை வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவர் என்று சொல்வது அடிப்படையில் நம்பிக்கைக்கும், பாரம்பரியத்துக்கும் விரோதமானது.


2) சங்க இலக்கியத்தின்படி திருவோணம் யாருக்குரியது?

அடுத்த பத்திலேயே முதலமைச்சர் மதுரைக்காஞ்சியில் 'மாயோன் மேய ஓண நன்னாள்' என்று குறிப்பிடப்படுவதாக எடுத்துகாட்டி, இது திராவிட நிலத்தின் பண்பாட்டு உறவைக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதன் பொருள் தெரிந்துதான் சொல்லி இருகிறாரா என்றால் இல்லை. ஏனென்றால், மேலே அவர் குறிப்பிட்டுள்ள சங்க இலக்கியப் பாடலில் மிகத் தெளிவாக திருவோணம் என்பது கூட்டமான அசுரர்களை வென்ற மாயோனுக்குரிய (திருமாலுக்குரிய) விழா என்று கூறுகிறது. (இப்படிச் சொன்னதும் ஒரு சிலர் அந்த சங்க கால மாயோன் வேறு, இன்றுள்ள கிருஷ்ணன் அல்லது பெருமாள் என்பவர் வேறு என்று கூறுவார்கள். அதற்கு எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் கிடையாது. சங்க இலக்கியங்களிலேயே கூறப்பட்ட மாயோன் என்பவர் முழு முதல் தெய்வமாக ஹிந்து வேத, புராண, இதிகாசங்களில் கூறப்படும் விஷ்ணுவே ஆவார்!). தவிர திராவிட நம்பிக்கைப்படி அசுரர்கள், திராவிடர்களின் முன்னோர்கள். ஆக, தம் முன்னோரை வென்ற திருமாலுக்குரிய திருவோண விழாவிற்கு வாழ்த்து கூறுவது திராவிடத்திற்கு எதிரானது அல்லவா?

திருவோணம் திருமாலின் பிறந்த நாள் என்று ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். குறிப்பாக பெரியாழ்வார், தலைமுறை தலைமுறையாகத் திருவோண விழாவில் 'இரணியனை (இவரும் திராவிட முன்னோர் என்று உரிமைக் கோரப்பட்டவர் தான்!) வென்ற திருமாலுக்கு 'பல்லாண்டு பாடுவதாகக் கூறியுள்ளார். ஆகவே திருவோணம் என்பது ஹிந்து தெய்வமான திருமாலுக்குரிய விழா என்றே தமிழ் இலக்கியம் சொல்கிறது.


அதுமட்டுமல்ல, கேரளத்தில் ஓணம் மிக முக்கியமான கொண்டாட்டத்தின் மையமே திருக்காட்கரை அப்பன் கோவில் எனும் திவ்யதேசம்தான். இங்குதான் திருமால் வாமனராக வந்து மஹாபலிக்கு அருளினார். ஆக எல்லா வகையிலும் திருமாலோடு சம்பந்தப்பட்ட இந்த விழாவிற்குத் திருமாலின் பெயரையே சொல்லாமல் வாழ்த்து சொல்லியிருப்பது பண்பாட்டுப் புரிதலற்ற வெற்று வாழ்த்தாகும்.


3) சமயங்களைக் கடந்ததா திருவோணம்?

மலையாள மக்கள் சமயங்களைக் கடந்து திருவோணம் கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர். மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியாகத் தோன்றலாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் திருமாலுக்கான இந்தப் பண்டிகையை எத்தனை மாற்று மதத்தினர் திருமாலை வணங்கிக் கொண்டாடுகிறார்கள்? எனில் இதை மலையாளிகள் பண்டிகை என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்? 


4) முதல்வரின் யுகாதி வாழ்த்தும் இதே போன்றது தான். யுகாதி என்பது தெளிவாகவே ஹிந்து பண்டிகைதான், அது தெலுங்கு புத்தாண்டு என்று கூறப்பட்டாலும் கூட, அது தெலுங்கர்களுக்கு மட்டுமானது அல்ல; கன்னடர்களும் இதர சில பாரதியர்களும் யுகாதி கொண்டாடுகிறார்கள். யுகாதி என்பது புராணங்களின் அடிப்படையில் உலகம் தோன்றிய முதல் நாள் ஆகும். எந்த விழாவும் மொழியின் அடிப்படையிலானதாக இருந்தது இல்லை. இந்த நாளில் ஆந்திராவில் இருக்கக்கூடிய நிறைய முஸ்லிம்கள், பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்குகிறார்கள். அதனால் இது மதசார்பற்ற பண்டிகை என்று கூறிவிட முடியுமா? அதுபோலத்தான் திருவோணமும். தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லப்படும் சித்திரைப் புத்தாண்டும் அப்படித்தான். அதைப் பலமுறை எழுதி உள்ளேன். 


5) தமிழகத்தில் பொங்கல் விழா விழாவை ஏதோ மதசார்பற்ற மொழி சார்ந்த விழாவாகப் பரப்புவதும் திராவிட அரசியல்வாதிகள் தான். தமிழகத்தில் பொங்கலைத் தமிழருடன் தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்டிரர்கள் கூடக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப் போனால் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்ற தமிழ் பேசும் கிறிஸ்தவ, முஸ்லிம்களை விட, பொங்கல் விழாவைக் கொண்டாடும் தமிழ் பேசாத ஹிந்துக்களே அதிகம். அதனால் பொங்கல் விழாவை தமிழகத்தில் வாழ்கின்ற ஹிந்துக்களின் பண்டிகை என்று தான் சொல்ல முடியுமே தவிர தமிழர்களின் பண்டிகை என்று சொல்ல முடியாது. ஆந்திராவில் பொங்கலுக்கு 10 நாள் விடுமுறை என்பது முதல்வருக்குத் தெரிந்திருக்கும். தவிர பாரத நாடு முழுவதும் இது மகர சங்கராந்தி என்று பொங்கலைக் கொண்டாடுகின்றனர். 


பாரதம முழுக்கக் கொண்டாடப் படக்கூடிய ஹிந்து பண்டிகைகளை மொழி ரீதியாகப் பிரிப்பது என்பது முற்றிலும் வரலாற்றுக்கும், பாரதப் பண்பாட்டிற்கு எதிரான செயலாகும்.


6) மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கு எப்போது வாழ்த்து?

ஹிந்து புராண நம்பிக்கைகளின் படி அமைந்திருக்கின்ற இந்தத் திருவோண விழாவிற்கு வாழ்த்து சொன்ன நம் முதலமைச்சர், அது போலவே கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். யுகாதி மற்றும் திருவோணம் விழாக்களுக்கு மட்டும் வாழ்த்து கூறி தெலுங்கு, கன்னட, மலையாள இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வர் மேற்குறிப்பிட்ட அனைத்து மொழி பேசக்கூடிய மக்களும் கொண்டாடக்கூடிய விழாக்களான கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.







நன்றி விஜயபாரதம் 

Comments

Popular posts from this blog

தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

மாயோன்

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்