ஐம்படைத்தாலி
காக்கும் இயல்வினனான கண்ணபிரானின் படைக்கருவிகளான சுதர்ஸனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கொமோதிகி என்னும் கதை, நாந்தகம் என்னும் வாள், சார்ங்கம் என்னும் வில் ஆகிய ஐந்தினையும் பஞ்சாயுதங்கள் என்பர். எதிரிகளை அழித்த இப்படைகலண்கள் சிறுகுழந்தைகளை துஷ்ட சக்திகளிடத்திருந்து காக்கும் என்பது நம்பிக்கை. இவற்றை பொன்னால் ஒரு பதக்கம் போல் செய்து குழந்தைகளின் பதின்ம வயது வரை கழுத்தில் அணிவிப்பது பண்டைய தமிழர் மரபு.
"தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே!
பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன்"
-புறம்
"முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால்"
-அகம்
"செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப"
-மணிமேகலை
"எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
தூமணி வண்ணனே தாலேலோ"
-பெரியாழ்வார் திருமொழி
"மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே"
-பெரியாழ்வார் திருமொழி
"தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை, பங்கயம்
வாய் நிலா உறக்குவிவ மானுமே''
-ராமாயணம்
இலக்கிய தரவுகள் மூலம் ஐம்படைத்தாலி என்பது 2000 ஆண்டு வழக்கம் என்றறிகிறோம். 1950களில் கூட சில வீடுகளில் இருந்த வழக்கம் என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!
உறகல் உறகல் உறகல்
ஒண்சுடர் ஆழியே சங்கே
அற எறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த
எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல்
பள்ளியறை குறிக்கொண்மின்!
முகநூல் நண்பர் பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களது பதிவு!
Comments
Post a Comment