சங்கத்தமிழில் அருந்ததி -20

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-20

sangathamil kaatum sanathana dharmam.

sanathana dharma in sangam literature.

THE SCIENTIFIC FACTS ABOUT ARUNTHATHI STAR.

அருந்ததி வசிஷ்டர் பார்ப்பதன் அறிவியல்
சனாதனதர்மமானது சங்கக்காலத் தமிழரின் வாழ்வியலில் வேரூன்றி, இன்றும் பாரம்பரியம் மாறாமல் எழுந்து நிற்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் இப்பாடல்.
புறநானூறு-122
பாடியவர்-கபிலர்
பாடப்பட்டவர்- மலையமான் திருமுடிக்காரி
கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை நினதென விலைநீ பெருமிதத் தையே.
பொருள்- திருமுடிக்காரியின் நாடு கடலாலும், பகைவராலும் அழிக்க இயலாதது எனினும் வேள்வித்தீ வளர்க்கும் குற்றமற்ற அந்தணர்க்குத் தரப்பட்டதாகும். தம்முடன் இணைய வேண்டுமென்று மூவேந்தரும் தரும் செல்வங்களோ தம் ஈகைக் குணத்தால் இரவலர்க்குத் தரப்பட்டதாகும். இதைத்தவிர காரிக்கு செல்வம், சொத்து உண்டெனின் அது அருந்ததியை ஒத்த கற்புடைய அவனது மனைவியே!! ஆகவே அது மட்டுமே அவனுக்குப் பெருமிதம் சேர்ப்பதாகும்.

சனாதனதர்மம் காட்டும் வாழ்வியல்.
அரசனானவன் தன்நாட்டில் தர்மம் நிலைத்திருக்க கொடையில் சிறந்தவனாய் இருத்தல் வேண்டும். வேள்வியும், வேதமும் நிலைத்திடச் செய்ய வேண்டும். என்பதைப் பின்பற்றி சங்கத்தமிழ் மன்னர்கள் வாழ்ந்துள்ளனர். பெண்ணானவள் கற்பொழுகத்தில் சிறந்த அருந்ததியைப் போல் வாழ வேண்டும். இப்பாடலில் வடமீன் என்று அருந்ததியைக் குறிப்பிடுகின்றனர். அதன்படியே தமிழ்ப்பெண்கள் வாழ்ந்தனர், வாழ்ந்து வருகின்றனர்.
அருந்ததியின் கதை பல்வேறு இந்து புராணங்களில் விவரிக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின மனைவி அருந்ததி, கற்பில் சிறந்த ரிஷிபத்தினி ஆவார். இன்றளவும் இந்துக்களின் திருமணங்களில் அருந்ததி_பார்த்தல் எனும் சடங்கு உள்ளது. அருந்ததி - வசிஷ்டர் தம்பதி போல் வாழ வேண்டும் என மணமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
வடதுருவத்தில் இருக்கும் ஏழு பிரகாசமான நக்ஷத்ரங்களை நாம் சப்தரிஷி என்கிறோம். மேற்கத்தியர் அதனை பெருங்கரடி (தி கிரேட் பியர்) என்கின்றனர். இதில் ஒரு பிரகாசமான நக்ஷத்ரமே மிஷார் - அதாவது நாம் வசிஷ்டர் என்கிறோம். இந்த நக்ஷத்ரத்தை ஒட்டியே சிறியதாக உள்ள நக்ஷத்ரமே அருந்ததி ஆகும் ஆங்கிலத்தில் அல்கர். இந்த இரு நக்ஷத்ரங்கள் ஜோடி நக்ஷத்ரங்கள் ஆகும். பொதுவாக இவ்வகை நக்ஷத்ரங்கள் ஒன்றை மையமாக வைத்து இன்னொன்று சுழலும் ஆனால் இவையோ ஒரே மைய புள்ளியை ஒன்றுபோலவே அழகாக சுற்றிவருகின்றன.

 இதைத் தம் அறிவால் உணர்ந்த நம் முன்னோர், மனைவியோ கணவனோ அதிகாரம் செலுத்தாமல் சமமாக வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்த இந்த நக்ஷத்ரங்களை முன்னுதாரணமாகக் காட்டினர்.



விஞ்ஞானம் வளரா காலத்தே இவ்வளவு அழகிய வானியல் நுட்பத்தைக் கண்டு அதனை வாழ்வியலில் நடைமுறைப் படுத்திய நம் சனாதனதமிழ் மக்களைப் போற்ற வார்த்தைகளே இல்லை!!!


Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்