சங்கத்தமிழில் தெய்வானை

சங்கத்தமிழ் காட்டும் சநாதனதர்மம் -57

ஸம்ஸ்க்ருதப் புராணங்களில் குறிப்பிடப்படும் ஸ்கந்தன்/கார்த்திகேயன் வேறு தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முருகன் வேறு என்று சிலர் கூறுகின்றனர்...
அதற்குச் சான்றாய் சங்கத்தமிழ் இலக்கியத்தில் முருகன் குறிஞ்சித் தெய்வமாதலால் வள்ளி எனும் குறமகள் மட்டுமே முருகன் மனைவி, தெய்வானை எனும் இந்திரன் மகளை முருகன் மனைவி என்று பார்ப்பனர்கள் பிற்காலத்தில் இட்டுக்கட்டு எழுதிவிட்டனர் என்றெல்லாம் உளறி வருகின்றனர்...இதற்கு எவ்வித சான்றும் இல்லை என்பதாகும்!



தொல்காப்பியத்தின் படி இந்திரன் எனும் வேந்தன் மருத நிலத் தெய்வம் ஆவார்! இவரது மகளே தெய்வானை ஆவார்!

"ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலருண்கண்" - பரிபாடல் 9 வரி 8

ஐயிருநாறு - ஐந்து இருநூறு அதாவது 5×200=1000...நயனம் - கண்கள்! இந்திரன் ஆயிரம் கண்களை உடையவராவார்! அவரது மகள் தெய்வானை! என்று பரிபாடல் இதை உறுதிசெய்கின்றது! ஆகவே புராணங்களில் உள்ள கருத்தே சங்க இலக்கியங்கள் ப்ரதிபலிக்கின்றனவே அன்றி இரண்டும் முரண்பட்டவை அல்ல என்று தெளிவாகின்றது!



திடீர் தமிழர்கள் பரப்பும் அத்தனைப் பொய்களையும் உடைக்கும் நக்கீரர்!
சங்கத்தமிழ் இலக்கியத்தில் ஸ்கந்தன்

மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே!
 - திருமுருகாற்றுப்படை (261-264)

முருகனைப் பற்றிப் பாடும் நக்கீரர் இவ்வாறு வர்ணிக்கிறார்! முருகப்பெருமான் மாலை அணிந்த மார்பினன், பல நூல்களைக் கற்ற புலவன் அதாவது மஹா ஞான பண்டிதன்! வடபாரதத்தில் முருகன் இயற்றியதாகச் சொல்லப்படும் ஸம்ஸ்க்ருத இலக்கண நூல் ஒன்று இருந்தததாம்! அதன் பெயர் 'கலாபம்' (மயில் என்று பொருள் படும்)

போர்த் தொழில் முதல்வன் முருகன்! அதாவது முருகன் போர் தெய்வம்! தேவ சேனாபதி! அதனால் தான் #கண்ணபிரான் கீதையில் 'சேனானீனாம் அஹம் ஸ்கந்த' - சேனைத் தலைவர்களில் நான் கந்தன் என்கிறார்! ஹிந்துக்களின் புனித நூலிலே குறிப்பிடப்படும் தெய்வம் எவ்வாறு
ஹிந்து தெய்வம் அல்லாது போவார்?!
ஸ்கந்தன் வெற்றியையுடைய மள்ளன் - அதாவது குன்றாத இளைமையை உடையவன் அதனால் குமரன் (குமரன் என்பது தமிழ்தானா?) எனப்படுகிறார்! குமரன் என்பதிலிருந்து ஷன்மதங்களுள் ஒன்றான #கௌமாரம் என்ற பெயர் வந்தது!

கார்த்திகேயன் அந்தணரது வெறுக்கை அதாவது செல்வம் ஆவான்! (சுப்ரமண்யன் என்ற சொல்லின் பொருளோ?) வள்ளி, #தெய்வானை ஆகிய இரு 'மங்கையரது' கணவன் என்று நக்கீரர் கூறுகிறார்! திருமுருகாற்றுப்படையில் குறமகள் வள்ளி மட்டுமே உண்டு! மருதத் தெய்வம் இந்திரன் மகள்  தெய்வானை இல்லை என்போருக்கான பதிலும் கூறிவிட்டார் நக்கீரர்!

Comments

Post a Comment

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்