சங்க இலக்கிய திருமாலும் வேத விஷ்ணுவும் ஒருவரா?
சங்கத்தமிழ்_காட்டும்_சனாதநதர்மம் - 55
தமிழின் மிகப் பழமையான சங்க நூற்களில் கூறப்படும் தெய்வங்கள் வேத தெய்வங்களே ஆவர்! இதில் எவ்வித ஐயமும் இல்லை! இன்று சிலர் வேதத்தில் விஷ்ணு இல்லை, பிற்காலத்தில் வேதத்தில் ஒட்டவைக்கப்பட்ட விஷ்ணுவும் தமிழ் இலக்கியங்களில் வரும் திருமாலும் வெவ்வேறு என்று கூறுவதற்குத் தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் இல்லை என்பதாகும்!
வேதங்களில் உள்ள புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம் ஆகியவை விஷ்ணுவைப் போற்றுவதாகும்! சங்க இலக்கியங்களில் அதிகமாகப் போற்றப்படுபவர் திருமாலே ஆவார்! அதிலும் சங்க நூற்களிலும் இதர பக்தி இலக்கியங்கள் அல்லாத நூற்களை எடுத்துக் கொண்டாலும் அதிகமான முறை கூறப்படும் புராண நிகழ்வு வாமன அவதாரத்தில் திருமால் த்ரிவிக்ரமனாகத் தோன்றி உலகளந்ததே ஆகும்! திருவள்ளுவரும் அடியளந்தான் என்று இவரைக் குறிப்பிடுகிறார்!
இத்தோடு திருமால் பற்றிய அதிகமான குறிப்புகளைக் கொண்டதான பரிபாடல் எனும் சங்க நூல்
'வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ' என்று வேதத்தின் மறைபொருள் திருமாலே என்று பறைசாற்றுகின்றது! அத்தோடு
'வாய்மொழி யோடை மலர்ந்த
தாமரைப் பூவினுட்பிறந்தோனுந் தாதையும் நீயென மொழியா மாலந்தணர் அருமறை' என்று நீயே பிரம்மதேவராகவும், அவரைத் தன் நாபிக் கமலத்தில் படைத்த நாராயணனாகவும் உள்ளாய் என்று அந்தணர் ஓதும் அருமறை உரைக்கின்றது என்று வேதத்தில் குறிப்படுப்படும் பரம்பொருள் திருமாலே என்று நிறுவுகின்றது பரிபாடல்! உண்மை இவ்வாறு இருக்க எந்த தமிழ்நூலை ஆதாரமாகக் கொண்டு திருமால் வேத விஷ்ணுவிடமிருந்து வேறுபட்டவர் என்று கதைசொல்லுகிறார்களோ?
Comments
Post a Comment