கற்போம் கம்பரை


          கம்பர் சைவரா வைணவரா என்று சர்ச்சையால் விளைந்த நன்மையை என்னவென்பது? இதுவரை ஆழமாகக் கம்பரைக் கல்லாத அடியேன் ராமாவதாரம் படித்து உருகுகிறேன்! முத்தையா என்ற நாத்திகன் கம்பரைக் கிண்டல் செய்ய எண்ணி ராமாயணம் படிக்க கம்பனால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணதாசன் ஆனான் என்பது சுயசரிதை!

 அதைப் போல் கற்பவரைக் கசிந்துருகச் செய்யும் கவி ஆற்றல் கம்பனுடையது! தமிழ்த்தாயே இறைவனிடம் தவமிருந்து பெற்ற பிள்ளை கம்பன்! அதனால் தான் "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். மனத்தில் ராமபக்தியை விதைக்கும் இந்நூலை கவித்திறனுக்காக மட்டுமே போற்றுவது ஏற்கத்தக்கதல்ல! கம்பராமாயணத்தின் உடல் செந்தமிழ் என்றால் அதன் உயிர் 'ராமபக்தி' ஆகவே 'கற்போம் கம்பனை' என்ற தலைப்பில் கம்பன் வழியாக தமிழைச் சுவைப்பதோடு முக்கியமாக ராமரசத்தைச் சுவைப்போம்!



தமிழ் மிகப் பெரிய இலக்கியமாக விளங்குவது கம்பர் பெருமான் இயற்றிய ராமாயணமே ஆகும்! ஆனால் அவர் இட்ட பெயரோ 'ராமாவதாரம்' பெயரிலிருந்தே தொடங்குவோம்! ராமாவதாரம் நிகழக் காரணம் என்ன?

 இதோ கம்பரே சொல்கிறார்!

திறத்து மாமறை அயனொடு ஐம்முகன் பிறர்தேடிப், புறத்தகத்து உணரரிய தன் பொலனடிக் கமலம் உறச்சிவப்பஇத் தரைமிசை யுறல் அறம் ஆக்கல் மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ?
 - நட்புக்கோட்படலம் 72 - 76
கம்பராமாயணம்

 உயர்ந்த வேதங்களாலும்,ப்ரம்மதேவர், ஐந்து முகம் கொண்ட மஹாதேவர் உள்ளிட்ட தேவர்களால் அறிந்து கொள்ள இயலாதது திருமாலது திருவடித் தாமரையாகும்! அத்தகைய பாதமானது சிவக்க பூமியில் ராமாவதாரம் எடுத்ததற்குக் காரணம் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டவே அன்றி வேறு எதுவும் உண்டோ? என்று பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணன் ராமாவதாரம் எடுத்த நோக்கத்தை அழகாக விளக்குகிறார் கம்பர்!



கம்பர் வர்ணனையின் மன்னர்! அதிலும் காவியத்தின் நாயகனான ஸ்ரீராமரை வர்ணிக்கும்போது நம்மையே மறக்க வைத்துக் கவிச்சுவையில் ஆழ்த்திவிடுகிறார்! இதோ சீதையுடனும், லக்ஷ்மணனோடும் கானகம் புகும் ஸ்ரீராமனது அழகை வர்ணிக்கிறார் பாருங்கள்!

 "வெய்யோனொளி தன்மேனியில் விரிசோதியின் மறைய பொய்யோயெனும் இடையாளுடன் இளையானுடன் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்".

 அதாவது ராமனது மேனியின் நிறம் சூர்யனின் ஒளியையே மறைத்துவிடுமளவு கருமையான மையோ ?! (கரியநிறம் ஒளியை ப்ரதிபலிக்காது அல்லவா? - விஞ்ஞானம்) அல்லது ஒளிவீசும் பச்சை மரகதக் கல்லோ...இல்லை அதனினும் அழகிய நீலக் கடலோ?! அல்லது அந்தக் கடலுக்கே நிறத்தைத் தந்திடும் மழை மேகமோ?! என்று வர்ணிப்பவர் கடைசியில் 'ஐயோ' அழியக்கூடியவை இவை எதுவுமே அவன் அழகுக்கு ஈடாகாதே?! அழியாத அழகை உடைய இவன் மேனியை வர்ணிக்கச் சொற்களே இல்லை என்று வியந்து மிக நேர்த்தியாக கவி அமைத்துள்ளார்! 'தனக்கு உவமை இல்லாதான்' என்று வள்ளுவன் இறைவனைக் கூறியதை நினைவூட்டுகிறார் கம்பர்!

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்