சங்கத்தமிழ் பரசுராம அவதாரம்- 28

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்- 28

சனாதனதர்மத்தின் படி எம்பெருமான் ஒன்பது அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்தார் என்பது உண்மையாகும். இதில் பசுரராம அவதாரம் பற்றிய செய்தி அகநானூற்றில் உள்ளது.




அகநானூறு பாடல்-220 (வரி 5-9)


மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல.

பொருள்:
மன்னர் பரம்பரைகளை அழித்து ஒழித்த மழுவினை உடைய பரசுராமர், முற்காலத்தில் இங்கே (செல்லூர் எனும் ஊரில்) பெருமுயற்சி செய்து வேள்வி செய்தார். அப்போது மிக உயர்ந்ததும், கயிற்றால் கட்டப்பட்டதுமான அழகிய யாகத்தூணை நிலைநிறுத்தினார், காவல் காக்கப்பட்ட அத்தூணை காண்பதே அரிது, அது போன்றது தலைவியின் அழகு என்று பாடல் கூறுகிறது.



நாம் அறிந்துகொள்வது:
நெடியோன் என்பது திருமாலைக் குறிக்கும், அதிலும் அதர்மம் செய்த க்ஷத்ரிய மன்னர் குலத்தை வேரோடு சாய்த்த மழு எனும் கோடரியை ஆயுதமாக உடையவர் பரசுராமரே, தமிழ்நாட்டில் செல்லூர் எனும் ஊரில் அவர் வந்து யாகம் செய்தார் என்று கூறுவதன் மூலம் பசுரராம அவதாரம் உண்மை என்று சங்கப்புலவர் ஏற்கின்றனர். மேலும் கேரள தேசமானது பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக இதன்மூலமாக பகவானின் திரு அதாரங்கள் பற்றிய வரலாற்றினை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்றும், இவற்றை ஆரியப் புரட்டு என்றுரைப்பது ஏற்றத்தக்கதல்ல என்பதும் விளங்கும்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்