சங்கத்தமிழ்_காட்டும்_கிருஷ்ணலீலா - 36

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம் -36

சங்க இலக்கியத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகள்


அகநானூறு பாடல் 59 வரிகள் (4-6)

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த "மாஅல்" போல,

இப்பாடலில் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியை ஆறுதல் படுத்துகிறாள் தோழி. இங்கே உவமை கூற வரும் இடத்தில் கண்ணனின் லீலையை விளக்குகிறாள். கண்ணன் யமுனை நதிக்கரையில் கோபிகைகளின் ஆடைகளை மறைத்து வைக்கிறான். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்க ஆடைகளை தருகிறான். கண்ணனது லீலைகள் அக்காலத்திலேயே தமிழகம் வரை பரவிய இருந்தன என்பதற்கு இதுவே சான்று.

 இந்த நிகழ்வு உண்மையில் மறைபொருளை உடையதாகும். இங்கே கண்ணன் பரமாத்மா, கோபிகைகள் பரமாத்மாவின் ஒரு துளியாகிய ஜீவாத்மா ஆனால்    அந்த ஜீவாத்மாக்கள் பாசம், பந்தம் லௌகிக இன்பங்களைத் தன் ஆடையாக தரித்துள்ளது. அதை பரமாத்மா தன் அருளால் நீக்க முற்படுகிறது. ஆனால் ஜீவாத்மா லௌகிக இன்பங்களில் திளைத்து அவற்றிலிருந்து விடுபட விரும்பாது தன் மாய ஆடையை கேட்கிறது (கோபிகைகள் உடையைக் கேட்டது போல்). இந்த போலி ஆடையைத் தூக்கி எறியாதவரை ஜீவன் முக்தி அடைவதில்லை. இதுவே இந்நிகழ்ச்சி சொல்ல வரும் கருத்தாகும்.

இன்னொரு நிகழ்ச்சி மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம். ஒருமுறை ஸ்வாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்
தனக்குக் கடவுளைக் காட்டுமாறு கேட்கவே அவரைத் தொட்டார் ராமகிருஷ்ணர், உடனே பரவச நிலை அடைந்து, தன்னைப் பிடித்துள்ள பாசம், பந்தம் அனைத்தும் மாயை என உணர்கிறார். ஆனால் அவரால் இதை ஏற்க இயலவில்லை, உடனே என்னை விட்டுவிடுங்கள் என்னை நம்பி என் தாயும், குடும்பமும் உள்ளதென்று கெஞ்சினார். பரமஹம்சர் விடுவித்தார். விவேகாந்தருக்குப் பக்குவம் வர காலம் எடுக்கும் என்று உணர்ந்தார்.

இந்த நிகழ்ச்சி மேற்கண்ட புராணத்தின் விளக்கமாக அமையும்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்