சங்கத்தமிழ் காட்டும் நாற்பெருந் தெய்வம்-13

சங்கத்தமிழ்_காட்டும்_சனாதனதர்மம்-13

உலகைக் காக்கும் நான்கு தெய்வங்கள் யாவர்? இதோ

புறநானூறு -பாடல்- 56

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,    
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,              
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின்,யாங்கும்                            
அரியவும் உளவோ, நினக்கே?
           
திணை -பாடாண் திணை; துறை- பூவை நிலை

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு

உலகைக் காக்கும் நால்வர் போன்றவன் இந்த நன்மாறன்.

பொருள்-
காளைமாட்டு ஊர்தி, தீ போன்று விரிந்த செஞ்சடை, கையில் கணிச்சி ஆயுதப் படை,கழுத்தில் நீலநிற நஞ்சுமணி ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1) இந்தக் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்


.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி, கலப்பை ஆயுதப் படை,பனைமரக் கொடி ஆகியவற்றை உடைய பலராமன் (2) இந்தப் பலராமன் போல் வலிமை
கொண்டவன்



கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,கருடப்பறவைக் கொடி ஆகியவற்றை உடைய திருமால் (3) திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்.



மயில் கொடி, மயில் ஊர்தி ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4) .முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.



இப்படி நான்கு பெருந் தெய்வம் போல் ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா? இல்லை.

நமக்கான செய்தி:
சங்கப்புலவர் பாண்டியனை ஒரே நேரத்தில் சிவன், முருகன் (தமிழ்க்கடவுள் என அறியப்படுவோர்) மற்றும் கிருஷ்ணன், பலராமன் (வடநாட்டுக் கடவுளாக நாம் நினைத்த கடவுளர்) ஆகியோருடன் ஒப்பிடுகிறார்.

மேலும் அக்கடவுளருக்குக் காட்டப்படும் ஆயுதங்கள், தோற்றம் என இன்று வரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கொடிச் சின்னங்கள் கூட மாறாமல் வாகனங்களாக பரிணமித்தன.

இதன்மூலம் இக்காலத்தில் சிலர் நம்மைப் பிரிக்கப் பயன்படுத்தும் கருத்தியல்களான ஆரியம்- திராவிடம், வடக்கு- தெற்கு, தமிழர்- வடவர், சைவம்- வைணவம் போன்ற எவ்வித எதிர்வும் அற்றிருந்த சனாதனதர்மத்தை இப்பாடல் மூலம் அறியலாம்.

வாழ்க தமிழர்_மெய்யியல், வாழ்க சனாதனதர்மம்.

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்